நாட்டில் தற்போது நிலவும் அதிக உஷ்ண நிலையைக் காரணங்காட்டி வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளை நண்பகல் 12.00 மணிக்கு மூடும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சும்,சுகாதார அமைச்சும் வலியுறுத்தியுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் வெப்ப காலநிலையில் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1.30 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை உச்ச மட்டத்தில் இருப்பதால் இக்காலப்பகுதியில் பிள்ளைகள் திறந்த வெளியில் நடமாடவோ வெளியில் செல்லவோ அனுமதிக்கக் கூடாது என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் நிலவும் வெப்பக் காலநிலையைக் காரணம் காட்டி வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வி அமைச்சர்கள் பாடசாலைகளை நண்பகல் 12.00 மணியுடன் மூடும் நடவடிக்கையை ஏற்கனவே எடுத்துள்ளனர். இவ்வாறான சூழலில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் அடிப்படையில் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இவ்விடயம் தொடர்பான சிபாரிசுகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையிலேயே கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்கள் மேற்கண்டவாறு அறிவித்துள்ளன.
அதேநேரம் பாடசாலைக் கட்டடங்களுக்கு வெளியில் திறந்த வெளியில் பிள்ளைகளை உடற்பயிற்சி உள்ளிட்ட விளையாட்டுக்களிலும் ஏனைய செயற்பாடுகளிலும் ஈடுபடுத்துவதையும் தவிர்க்க வேண்டும், பிள்ளைகள் போதியளவு தண்ணீர் பருக ஊக்கமளிக்க வேண்டும், வகுப்பறைகளுக்கு போதிய காற்றோட்ட வசதியை ஏற்படுத்தவென வகுப்பறைக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்துவிட வேண்டும், பாடசாலைகளில் போதிய குடிநீர் வசதி இல்லையாயின் அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பனவும் அச் சிபாரிசுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்தோடு பாடசாலைப் பிள்ளைகள் கழுத்து சுருக்கு பட்டி அணிவதைத் தவிர்க்க வேண்டும், அதிக வெப்பநிலை காணப்படும் திறந்தவெளிச் சூழலில் தொப்பி மற்றும் குடைகளைப் பாவித்தல், இனிப்புத்தன்மை அதிகம் மிக்க பானங்களைத் தவிர்த்தல், வழமையை விடவும் அதிக நீரைப் பருகச் செய்தல் எல்லாப் பிள்ளைகளும் குடி தண்ணீர் போத்தல்களைப் பாவிக்க வேண்டும் என்ற சிபாரிசுகளும் அவற்றில் அடங்கியுள்ளன.