இந்த ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
எல்லை நிர்ணய சபையின் அறிக்கையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிறுவப்பட்ட குழு, ஆகஸ்ட் மாதம் 31ம் திகதியளவில், தமது அறிக்கையை துறைசார் அமைச்சரிடம் ஒப்படைக்கவுள்ளது.
இது தொடர்பில் குழுவின் தலைவர் எனக்கு அறிவித்துள்ளார்.இதன்படி, அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் மூன்று மாதங்களில் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
இந்த தேர்தல் 2016ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடத்தப்படும்.இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணிகள் செப்டம்பர் மாதமளவில் பூர்த்தியாகும்.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த சட்டவாக்கத்தை மேற்கொள்ளும் பணி நாடாளுமன்றின் பொறுப்பு என்பதனால் அதில் தேர்தல் ஆணைக்குழு தலையீடு செய்ய முடியாது.
துறைசார் அமைச்சர், எல்லை நிர்ணயம் குறித்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் அறிக்கையை வர்த்தமானி மூலம் அறிவித்த பின்னர் தேர்தலை நடத்த முடியும்.
மேலும் உச்ச நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலும் தேர்தல் ஆணைக்குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.