இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று(02) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வட மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் திட்டத்திற்கு மாற்றுத் திட்டங்கள் இருக்கின்ற போதும் இரனைமடுவில் இருந்தும் நீர் கொண்டு செல்லப்படும் ஆனால் அதற்கு முன்னதாக மாவட்ட விவசாயிகளின் அச்சங்கள் நிவர்த்தி செய்யப்படுவதோடு அவர்களுக்கான காப்பீடு தொடர்பிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் 2006 ஆம் ஆண்டிலிருந்தே இரனைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் சர்சைக்குரியதாக காணப்பட்டு வருகிறது குடிநீர் பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினை இதில் அரசியல் கலப்பது நியாமற்றது என்றார்
அத்தோடு கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் மேலதிக நீரை கொண்டு செல்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. இரனைமடுவில் மேலதிகமாக சேமிக்கப்படுகின்ற நீரிலும் அரைவாசி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அந்த வகையில் விவசாயிகள் பீதியடைய தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்
சுண்ணாகம் நிலத்தடி நீரில் எம்மால் நியமிக்கப்பட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குழுவின் ஆய்வின்படி எண்ணெய் கசிவுகள் கலந்துள்ளது. எனவே அந்த நீர்குடிப்பதற்கு உகந்தது அல்ல. எனினும் வடக்கு மாகாண சபையின் குழுவின் ஆய்வின்படி அவ்வாறு எண்ணெய் கசிவுகள் நீரில் கலக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு குழப்பகரமான நிலைமை எனவே இது தொடர்பில் மேலதிகமாக குழுக்களை அமைத்து ஆராயவேண்டும் என்றார்.
இன்றைய இந்த உயர் மட்டக்க கூட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சுதர்சின் பெர்ணான்டோ, சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வட மாகாண அமைச்சர்களான குருகுலராஜா, ஜங்கரநேசன், சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் மன்னார், யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,அரச அதிபர்கள் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.