மல்லாவி, கோட்டை கட்டிய குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்த திருடர்கள், 12 பவுண் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மல்லாவிப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை வேளை, வீட்டுக்கதவைத் திருடர்கள் தட்டியபோது, வீட்டிலிருந்தோர் கதவைத் திறக்கவில்லை. அதன்போது தாம் சி.ஐ.டி எனத் தெரிவித்த திருடர்கள்,’வீட்டில் சந்தேகநபர் ஒருவரை மறைத்து வைத்துள்ளீர்கள். எனவே, நாங்கள் சோதனையிட வந்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.
எனினும், வீட்டிலிருந்தோர் கதவைத் திறக்கவில்லை. இதனையடுத்து வீட்டுக்கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள், வீட்டிலிருந்த அனைவரையும் வீட்டின் வெளியில் அமர வைத்துவிட்டு, வீட்டினை முழுமையாக ஆராய்ந்து 12 பவுண் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கறுப்புத் துணியால் முகத்தைக் கட்டியபடி வந்த 8 பேரே இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளை இடம்பெற்ற வீட்டில், கடந்த வாரம் திருமண நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.