Ad Widget

கூட்டுறவு அமைப்புகள் அரசியல் கட்சிகளின் தொண்டர்படையாக இயங்கக் கூடாது

ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கூட்டுறவுத்துறையின் இன்றைய சரிவுக்கு கூட்டுறவு அமைப்புகளினுள்ளே கட்சி அரசியல் புகுந்ததும் ஒரு காரணம். ஒருபோதும் கூட்டுறவு அமைப்புகள் கட்சி அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது. கட்சிகளின் தொண்டர்படையாக இயங்கக் கூடாது என்று வடக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

14

வடமாகாண கூட்டுறவாளர்களின் மேதினப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.05.2016) கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கூட்டுறவு அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்களுக்கு எல்லா மக்களையும் போலவே அரசியலில் ஈடுபட, தாம் விரும்பிய ஒரு கட்சியை ஆதரிக்க உரிமை உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகளின் சொத்துகளையோ, கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களையோ கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டுறவு அமைப்புகளின் பெயரைச் சொல்லி அரசியலில் ஈடுபடுவது கூட்டுறவைப் பாதிக்கும் ஒரு செயலாகவே அமையும்.

கூட்டுறவு என்பது இனம், மொழி, மதம் என்ற பாகுபாடு அற்று எல்லோரும் ஒருமித்துக் கூட்டாக இயங்கவேண்டிய ஒரு துறை. அதன் அங்கத்தவர்களின் நலன்களைப் பேணுவதற்காக உழைக்கவேண்டிய ஒரு துறை. ஆனால், கட்சி அரசியல் புகுந்துவிட்டால் பிளவுகள் தோன்றும். இது கூட்டுறவின் வளர்ச்சியைப் பாதிக்கும். கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் கூட்டுறவுச் சங்கங்கள் பின்னால் செல்லவேண்டிய நிலை இருந்தது.

அரசியல் செல்வாக்குக் காரணமாக தவறு விடும் எவரையும் தட்டிக் கேட்கவோ, தண்டனைக்குள்ளாக்கவோ முடியாத நிலை இருந்தது. இப்போது இவ்வாறு இல்லை. நாங்கள் ஒருபோதும் அரசியலுக்காக உங்களைப் பயன்படுத்தவோ பந்தாடவோ மாட்டோம். உங்களுக்கிடையில் இருக்கும் பேதங்களையெல்லாம் மறந்து, கூட்டுறவு என்ற ஒற்றைக் கொடிக்குக் கீழே ஒற்றுமையாக நீங்கள் அணி திரண்டால் கூட்டுறவுத்துறையை மீண்டும் மிடுக்கோடு நிமிர்ந்தெழச் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

Related Posts