ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கும் அதன் கீழ்மட்ட அரசியல் கட்டமைப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக முயற்சித்து வருகின்றார். இதன் ஓர் அங்கமாக கட்சியை விமர்சிப்பவர்களிடமிருந்து தொகுதி, மாவட்ட அமைப்பாளர் பதவியைப் பறித்து அதை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கி வருகின்றார்.
அந்தவகையில் சு.கவில் இருந்துகொண்டு மஹிந்த ஆதரவு அணியுடன் இணைந்து அரசியலை முன்னெடுத்துவரும் சாலிந்த திஸாநாயக்க எம்.பி., கீதா குமாரசிங்க எம்.பி. ஆகியோரை தொகுதி அமைப்பாளர் பதவிலிருந்து தூக்கியுள்ளார்.
சாலிந்த திஸாநாயக்க தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட ஹிரியால தொகுதியின் புதிய அமைப்பாளராக வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கீதா குமாரசிங்க தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட பெந்தர எல்பிட்டிய தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் கிருஷான் ஸ்ரீமான்ன மற்றும் எல்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அமில ஹர்ஷன காரியவசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தொகுதி, மாவட்ட அமைப்பாளர்கள் 11 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் நேற்று வியாழக்கிழமை நியமனங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சு.கவில் உள்ளவர்கள் சிலர் மஹிந்த அணிக்கு சார்பாக செயற்பட்டுவரும் நிலையிலேயே, இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி,கம்பஹா மாவட்டத்தின் அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் பேரரான பிரதீப் ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களாக மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் காமினி டி சில்வா, புத்திக்க இத்தமல்கொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்ட அமைப்பாளராக மனுல சமல் பெரேராவும், காலி மாவட்ட அமைப்பாளராக பியல் தர்ஷன குருகேயும் கேகாலை மாவட்ட அமைப்பாளராக நளீன் புஸ்பகுமாரவும், குருநாகலை மாவட்ட அமைப்பாளராக துசார திலக்கரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பெந்தர எல்பிட்டிய அமைப்பாளர்களாக பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் கிரிஷான் சிறிமான்னவும், எல்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அமில ஹர்ஷன காரியவசமும் நியமிக்கப்பட்டுள்ளனர். நுவரெலிய தொகுதி அமைப்பாளராக ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, தொகுதி அமைப்பாளர் பதவிலிருந்து தான் தூக்கப்பட்டமை குறித்து, நாளை அல்லது நாளைமறுதினம் தனது நிலைப்பாட்டை கீதா குமாரசிங்க தெளிவுபடுத்துவார் என்று அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், வெளிநாடு சென்றுள்ள சாலிந்த திஸாநாயக்க முதலாம் திகதியே நாடு திரும்பவுள்ளார். அதன்பின்னரே அவரும் இது குறித்து அறிவிப்பு விடுக்கவுள்ளார்.