நில அளவைத் திணைக்களத்தினால் பல இடங்களிலும் காணி அபகரிப்பு நடைபெறும் எனத் தெரிந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அக்கறை செலுத்தாமையால் கடந்த செவ்வாய்க்கிழமை செம்மலைப் பகுதியிலுள்ள 120 ஏக்கர் தென்னங்காணி படையினர் வசம் சென்றுவிட்டது. இது குறித்துத் தெரியவருவதாவது,
படையினரின் பொதுத் தேவைக்காக காணிகளை அபகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி அளவீடுகள் நடைபெற்று வருகின்றது. காணி அமைச்சின் பணிப்பிற்கமைய அளக்கப்படும் காணிகள் இராணுவத்தினருக்கோ அல்லது கடற்படையினருக்கோ சட்டப்படி மாற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு இடங்களில் காணிகள் அளவீடு செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இதில், மூன்று இடங்களில் நடைபெற்ற காணி அபகரிப்பின்போது மக்களின் பலத்த எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் செம்மலைப் பகுதியில் எந்தவித எதிப்பும் வெளியிடப்படாத நிலையில் 20 ஏக்கர் காணி படையினர் வசமானது.
இதன் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருந்ததாக அதிர்ச்சித் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. இக்காணி அளவீடு தொடர்பில் ஏற்கனவே கிராம அலுவலர்களுக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, கிராம அலுவலர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் விசுவமடு தொட்டியடிப்பகுதியில் காணி அளவீடு செய்யும்போது சாந்தி சிறீஸ்கந்தராசா மக்களுடன் இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதேநேரம் செம்மலையிலும் காணி அளவீடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்த சிவமோகன், ரவிகரன் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் அக்கறையின்றிச் செயற்பட்டதால் 20 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசம் சென்றுவிட்டது.
இந்த விடயம் தொடர்பில் இவர்களிடம் கேட்கப்பட்டபோது, சிவமோகன் தனிப்பட்ட காரணத்தைக் கூறி அங்கு செல்வதைத் தவிர்த்திருக்கிறார். அதேபோல் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அரசாங்க நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்றிருக்கின்றார். அன்ரனி ஜெகநாதனைக் கேட்டபோது தனக்கு சலக்கடுப்பு எனவும் தன்னால் செல்லமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிலாவத்தைப் பகுதியில் நடைபெற்ற நில அளவையில் அப்பகுதி மக்கள் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அந்தப் பணி நிறுத்தப்பட்டது. இதில் நிற்கவேண்டிய உறுப்பினர்களான ரவிகரனும் ஜெகநாதனும் புதுக்குடியிருப்புக்கு போஸ் கொடுக்கச் சென்றதாக சிலாவத்தை மக்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்று, நாயாற்றுப் பகுதியிலும் சுழிபுரப் பகுதியிலும் காணி அளவீடு நடைபெறவிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.