முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விசுவமடு, நாயாறு பிரதேசங்களில் இடம்பெறவுள்ள இராணுவத்தின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நேற்று புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காலை 9 மணி முதல் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘பிடிக்காதே பிடிக்காதே காணிகளைப் பிடிக்காதே’, ‘அரச அதிகாரிகளே இராணுவ ஆக்கிரமிப்புக்குத் துணைபோகாதீர்!, ‘நமது மண் நமக்கு வேண்டும்; இராணுவமே வெளியேறு’ உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கி இருந்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இறுதியில் மாலை அரச அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோர், “பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்க இடமளியோம்” என்று வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் உண்ணாவிரதம் தண்ணீர் வழங்கி முடித்துவைக்கப்பட்டது.