கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டு வரும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு காணியமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அந்நடவடிக்கை இடைநிறுத் தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.
கொக்கிளாய்ப் பகுதியில் கடந்த 2012 ஆண்டிலிருந்து இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இந்த விகாரை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்தக் காணியின் உரிமையாளரான மணிவண்ணதாஸ் என்பவர் 2015ஆம் ஆண்டு காணிப் பிணக்குகளைத் தீர்க்கும் நடமாடும் சேவையில் இந்த விகாரை அமைக்கப்படும் விடயம் குறித்து முறையிட்டிருந்தார்.
இதையடுத்து இக்காணிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக வருகை தந்திருந்த மேலதிக செயலாளரும், காணிக் கொள்கைகள் உதவிப் பணிப்பாளரும் அக்காணி மணிவண்ணதாசுக்கு உரியது. அதில் விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தனர்.
ஆனால், அதனைக் கருத்திலெடுக்காத விகாராதிபதி தனது பணியை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார்.
வடக்கு மாகாண ஆளுநர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் அதனை தான் நேரடியாகச் சென்று பார்வையிடப்போவதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இதுவரைகாலமும் அதைச் சென்று பார்வையிடவில்லை.
இந்நிலையில், அனைத்துச் சட்டங்களையும் மீறி விகாரை அமைக்கும் விகாராதிபதிக்கெதிராக இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென அவ்வூர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.