Ad Widget

மே மாதம் முதல் புதியதொரு அரசியல் வேலைத்திட்டம்!

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் புதியதொரு அரசியல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

3b12b5f4d82b14ddaa25c27670b08bd5_XL

அவ்வாறே நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைக்காக புதிய அரசியல் தீர்மானங்கள் பலவற்றை மே முதலாம் திகதிக்குப் பின் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து ஊழல் மோசடிகள் எதுவும் இன்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லல் மற்றும் ஊழல் மோசடிகளை மேற்கொண்டு அரச சொத்துக்களையும் அதிகாரத்தையும் முறைகேடாக பயன்படுத்தி, ஊழல்களில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்கு இத் தீர்மானங்கள் காரணமாக அமையுமெனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (25) முற்பகல் மெதிரிகிரிய நீர்ப்பாசன கருத்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சுதந்திரமான நாடு மற்றும் தூய்மையான அரசியல் எதிர்பார்ப்புடன் புதிய அரசாங்கத்தை பதவியில் அமர்த்துவதற்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை முறியடிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார். சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ள நாட்டில் எவ்வாறான விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு பலமான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சர்வதேசத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே ஏழு உலக வல்லரசுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதென ஜனாதிபதி தெரிவித்தார்.

அவ்வாறே இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக கண்டறிவதற்கு ஜெர்மன் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் அந்நாட்டின் முன்னணி முதலீட்டாளர்கள் சிலருடன் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கைக்கு பெற்றுத்தர முடியுமான ஒத்துழைப்பு பற்றி கண்டறிவதற்கு ஈரான் அரசும் விரைவான சுற்றுலா ஒன்றுக்காக தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அரச சொத்துக்கள் மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து ஊழல் மோசடிகளை மேற்கொள்வதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் அது தொடர்பாக முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப் பெறின் தராதரம் பார்க்காது சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். குடிநீர் சுத்திகரிக்கும் உபகரணங்கள் மற்றும் புதிய குடிநீர் இணைப்புக்களை மக்களிடம் கையளிக்கும் அடையாள நிகழ்வு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சர் ரவுப் ஹக்கீம், வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சிட்னி ஜயரத்ன, சிறிபால கம்லத் ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts