பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாக, பிவிதுரு ஹெல உருமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து சுயாதீன அரசாங்கமாக்குவது தமிழீழம் மேலும் தலைதூக்குவதற்கான நடவடிக்கை என அவர் கூறியுள்ளார்.
பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாகவும், இது தொடர்பில் பிரதமர் அல்லது ஜனாதிபதி எந்தவொரு கருத்தையும் வௌியிடவில்லை எனவும், அதற்கு பதிலளித்தது அஜித் பி பெரேராவே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த அரசாங்கம் பலவீனமானது என கூறிய கம்மன்பில, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழர்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
அவ்வாறு நடந்தது அதற்கு மஹிந்த அரசாங்கம் இடமளிக்காமையாலேயே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இனந்தெரியாத சிலர் பல்வேறு ஊடகங்கள் மூலம் தான் மற்றும் விமல் வீரவங்க ஆகியோர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதாக, கூறிவருவதாக, தெரிவித்த கம்மன்பில, தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தவில்லை எனவும், அதனைச் செய்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.