காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவர் யாழ். மாவட்ட செயலகத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள இயக்குவது குறித்து அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, ரிசாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
காங்கேசன்துறை பகுதியில் சுண்ணக்கல் அகழ்வது தடை செய்யப்படும். இந்த பிரதேசத்து இளைஞர் யுவதிகள் தான் சீமெந்து தொழிற்சாலையில் வேலைக்கு உள்வாங்கப்படுவார்கள். வடமாகாணத்தில் முதலீடு செய்ய வரும் தனியார் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
இந்த பிரதேச பொருளாதார மேம்பாட்டிற்கும், இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்புக்கும் வழங்குவதற்காகவும் சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மத்திய மாகாண சுற்றாடல் அமைச்சின் அறிக்கைக்குப் பின்னர் இது ஆரம்பிக்கப்படும். 1990ம் ஆண்டு மூடப்பட்ட சீமெந்து தொழிற்சாலை மட்டுமன்றி, பரந்தன் இராசாயன தொழிற்சாலையினையும் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஆணையிறவு உப்பளத்தினையும் மீள ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.
20 வீதமான உப்பினை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றோம். ஆனால், இந்த வருடம் 8 ஆயிரம் மெற்றிக்தொன் உப்பினை உற்பத்தி செய்துள்ளோம். அதேவேளை, அடுத்த வருடம் 32 ஆயிரம் மெற்றிக்தொன் உப்பினை உற்பத்தி செய்வதற்கு தீர்மானித்து வருகின்றோம் என்றார்.