வட மாகாணத்திலுள்ள மூன்று முக்கிய தொழற்சாலைகளை மீண்டும் இயங்கவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது குறித்த முக்கிய பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயண தொழிற்சாலை மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள இயங்கவைப்பது தொடர்பாகவே இப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. யாழ் கச்சேரியில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில், யாழ் அரச அதிபர் என்.வேதநாயகன், வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வடக்கின் முக்கிய தொழற்சாலைகளாக காணப்பட்ட குறித்த மூன்று தொழிற்சாலைகளும், யுத்தத்தின் விளைவால் கடந்த 1990ஆம் ஆண்டு மூடப்பட்டன. இவற்றில் ஆணையிரவு உப்பளம் மாத்திரம் தற்போது பகுதியளவில் இயங்கி வருகின்ற நிலையில், அதனை முழுமையாக இயங்க வைப்பதற்கும் ஏனைய தொழிற்சாலைகளையும் முன்பிருந்தது போல இயங்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டார். அத்தோடு, இவற்றினை வெற்றிகரமாக மேற்கொள்ள, வட மாகாண சபையின் ஒத்துழைப்பு மிக அவசியமென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வட பகுதி இளைஞர்களின் தொழில்வாய்ப்பு என்பவற்றில் முக்கியத்துவம் செலுத்திவந்த குறித்த மூன்று தொழிற்சாலைகளும் மீள இயங்கும் பட்சத்தில், வட பகுதியின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளும் அதே சந்தர்ப்பத்தில், வட பகுதியின் பொருளாதார கட்டமைப்பும் முன்னேற்றம் காணுமென எதிர்பார்க்கப்படுகிறது.