மத்துகம, ஓவிட்டிகல, பட்டமுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுக்கன சிலையினை ஒத்த தெற்காசியாவின் மிகஉயரமான நிமிர்ந்து நிற்கும் புத்தர் சிலையினை திறந்து வைக்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் முற்பகல் இடம்பெற்றது.
135 அடி உயரம் கொண்ட இந்த புத்தர் சிலையானது மாகாண சபை உறுப்பினர் ஜகத் பின்னகொட அவர்களின் தனிப்பட்ட நிதி அன்பளிப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலைக்கான முதலாவது மலர் பூஜை வழிபாட்டினை மேற்கொண்டு பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, பௌத்த சிந்தனையின் அடிப்படையிலேயே இன்று சிறந்ததொரு சமூகத்திற்கான அத்திவாரம் இடப்படுவதாகவும், அதன் பெறுமதியை நன்கு உணர்ந்ததன் காரணமாகவே இன்று உலகில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கூட பௌத்த மதத்தை நாடும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மதத்தைப் பேணி வாழ்பவர் மதத்தின் மூலம் பாதுகாப்பு பெறுவதாக குறிப்பிடப்படும் புத்தரின் நற்போதனையை சதாவும் நினைவில் நிறுத்தி பௌத்த சிந்தனைக்கு அமைவாக தமது வாழ்வினை சீர்செய்து கொள்வதற்கு நாம் அனைவரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இதன் போது ஜனாதிபதி ஞாபகப்படுத்தினார்.
மத்துகம, ஓவிட்டிகல, பட்டமுல்லகந்த பௌத்த மத்திய நிலைய வளவில் ஜனாதிபதியினால் நாக மரக் கன்று நடப்பட்டது. ராமன்ய நிக்காயாவின் மகாநாயக்கர் அக்கமகா பண்டிதர் சங்கைக்குரிய நாப்பானே பிரேமசிறி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அர்ஜுன ரணதுங்க, மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய ஆகியோரும் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும் தொகையான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.