கிளிநொச்சி மாவட்டத்தில் 3701.5 ஏக்கர் நிலம் முப்படைகளினதும் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம், கடற்படை, விமானப் படை, மற்றும் பொலிஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டிலேயே இந்த நிலங்கள் காணப்படுகின்றன. இதில் அரசகாணி, தனியார் காணி, திணைக்களங்களுக்குச் சொந்தமான காணி, மற்றும் ஒதுக்கீட்டு காணி என்பன இதில் அடங்குகின்றன.
அரசகாணிகள் 360 ஏக்கரும், தனியார் காணிகள் 229.5 ஏக்கரும், திணைக்களங்கள் மற்றும் ஒதுக்கீட்டு காணிகள் 3112 ஏக்கர் காணிகளும் இதில் அடங்குகின்றன. கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 231 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 201 ஏக்கர் காணியும், பூநகரி பிரதேச செயலக பிரிவில் 3086.5 ஏக்கர் காணியும், பச்சிலைப்பள்ளியில் 183 ஏக்கர் காணியும் முப்படையினரிடம் காணப்படுகிறது.
கரைச்சியில் இராணுவத்தினரிடம் 231 ஏக்கரும், கண்டாவளையில் இரானுவத்தினரிடம் 196 ஏக்கரும், கடற்படையிடம் 5 ஏக்கரும், பூநகரியில் இரானுவத்திடம் 1568.5 ஏக்கரும், கடற்படையிடம் 1507 ஏக்கரும்,பொலீஸாரிடம் 11 ஏக்கரும், பச்சிலைப்பள்ளியில் இராணுவத்திடம் 177 ஏக்கரும், கடற்படையிடம் 5 ஏக்கரும், பொலீஸாரிடம் 01 ஏக்கரும் காணப்படுகிறது.
இதனை தவிர வனவளத்திணைகளத்திற்கு சொந்தமான பல ஏக்கர் காணிகளும் இராணுவத்தின் வசம் காணப்படுகின்ற போதும் அதன் பரப்பளவுகள் இங்கு உள்ளடக்கப்படவில்லை. மொத்தமாக 4175.5 ஏக்கர் காணி முப்படையினரிடம் காணப்பட்ட நிலையில் அதில் 474 ஏக்கர் விடுவிக்கப்பட்டு தற்போது இன்னும் 3701.5 ஏக்கர் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.