அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘2016 தீர்வு உங்களின் வாக்குறுதி நிறைவேறுமா?’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது அவர் பதிலளிக்கையில்,
தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்ற எனது கணிப்பை குழப்பும் விதத்தில் ஊடகங்கள் செயற்படுகின்றன எனத் தெரிவித்தார்.
தீர்வு ஒன்றை எட்டவேண்டுமாயின் அதற்கென சில ஒழுங்குகள் உள்ளன. சில கருமங்கள் நடைபெறவேண்டும்.
என்னுடைய கணிப்பின் பிரகாரம் ஆட்சி மாற்றம் நடைபெற்றிருக்கிறது. மகிந்த வீட்டுக்குப் போயிருக்கிறார். மைத்திரி பதவியேற்றிருக்கிறார். ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேன எமது பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புகின்றார் என்பது என்னுடைய கணிப்பு.
அத்துடன் மைத்திரிபாலசிறிசேனவுக்கு பிரதமராக ரணில் வந்திருக்கிறார். அவருக்கும் எங்களுடைய பிரச்சனையைத் தீர்பதில் விருப்பம் இருக்கின்றது என்பது என்னுடைய மற்றொரு கணிப்பு.
மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் பெரும்பான்மை பெறவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவுடன்தான் மூன்றில் இரண்டு வீத பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தனர்.
ஆகையால் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படவில்லை. எல்லோரும் விசுவாசமாகச் செயற்பட்டால் இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்பதே என்னுடைய கணிப்பு என்றார்.
இதனை தினக்குரல் பத்திரிகையானது தலைப்புச் செய்தியாக ‘2016 தீர்வு எனது கணிப்பு மட்டுமே சம்பந்தன் திடீர் குத்துக்கரணம்’ இவ்வாறு பிரசுரித்திருந்தது.
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இது உண்மைக்குப் புறம்பானது என பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
(18/04/2016) தினக்குரல் தலைப்புச் செய்தியாக ‘2016 தீர்வு எனது கணிப்பு மட்டுமே – சம்பந்தன் திடீர் குத்துக் கரணம்?‘ என்று பிரசுரிக்கப்பட்டிருப்பது உண்மைக்கு மாறானதாகவும், வேண்டுமென்றே விஷமத்தனமானதாகவும் செய்யப்பட்ட பிரசுரிப்பு என்பதை தங்களுக்கு மிகுந்த கவலையுடன் தெரிவிக்க விரும்புகின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ம. ஆ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கோப்பாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் ‘விசுவாசமாக எல்லோரும் செயற்பட்டால் இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்பதே என்னுடைய கணிப்பு’ என்றுதான் கூறியிருந்தாரெனவும் அப்படியிருக்க, தனது இந்த கணிப்பு சம்பந்தமாக அவர் குத்துக் கரணம் அடித்தார் என்று தலைப்பிலும், பின் மீண்டும் ஒருமுறையும் சொல்லப்பட்டிருப்பது மிகவும் தவறான தகவலானது, வேண்டுமென்றே விஷமத்தனமாக செய்யப்பட்ட பிரசுரம் என்றே நாம் கருதக் கூடியதாக உள்ளது என்றும் சுமந்திரன் எம். பி. நேற்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பின்வருமாறு தெரிவித்திருந்தது.
2015ஆம் ஆண்டு தேர்தலுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புதிதாக ஆட்சியமைக்கும் மைத்திரிபாலசிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவேண்டுமென பிரச்சாரம் செய்திருந் ததோடு மைத்திரிபாலசிறிசேன ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச் சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றதன் பிற்பாடு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு வாக்களித்தால் ‘2016இற்குள் தாம் தீர்வைப் பெற்றுத் தருவதாக பிரச்சாரம் செய்தனர்’. அத்துடன் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.
இதனை நம்பி தமிழ் மக்கள் தமது அமோக ஆதரவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளரும் அவரிற்கு ஆதரவாக இரு ஊடகவியலாளர்களும் தமது பணியினை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது தொடர்பில் ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில்..
கொழும்பில் தலையாட்டுபவர்கள் போல தான் செய்தி அறிக்கையிட முடியாதென தெரிவித்துள்ள அவர் சம்பந்தன் பத்திரிகையாளர் மாநாட்டில் சொன்னவற்றை ஒலிப்பதிவு சான்றாக சமர்ப்பிக்க தான் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்துள்ளார்.