கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுககு அருகில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன. தற்போது பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டும் சிவன் ஆலயம் பராமரிப்பாரற்றும் காணப்படுகின்றன. மறுமுனையில் திரிபுபடுத்தப்பட்ட பௌத்த வரலாறுகளை இதனுடன் தொடர்பு படுத்தி அரசியல் மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது. இப்போது இந்து மத அடையாளங்கள் அருகி பௌத்த வழிபாட்டுக்குரிய அடையாளங்களே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இப்பிரதேசம் தொல்பொருளியல் திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ளது. தற்போது வழங்கப்படும் நுழைச்வுச்சீட்டிலே இவை அநுராதபுர காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் பௌத்த மதத்திற்குரிய பிரதேசத்தில் அமைந்திருப்பதாகவும் தொல்பொருளியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி கன்னியா வெந்நீரூற்று ஒரு சிங்கள மன்னனால் பௌத்த மதத்துக்குரியதாக அமைக்கப்பட்டதென்றும் அங்கே விகாரையொன்றும் கட்டப்பட்டதாகவும் போயா தினங்களில் குறிப்பாக வெசாக் பொசன் தினங்களில் நீராடினால் புண்ணிய பலன் கிட்டுவதாக அந்த சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது!
அடுத்த தலைமுறையில் வரலாற்று பாடநூல்களில் இந்த புதிய வரலாறு அச்சிடப்பட்டு இந்துக்களின் வரலாறு மறைக்கப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்!
“காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல ஒன்று நீதி பெறாவேளை துயர் மனம் போல ஒன்று நிறைபழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னி யாயில்”
நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கன்னியா வெந்நீரூற்று குறித்து எழுதிய பாடல் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது!