திரைப்பட பாடலாசிரியரும், வைரமுத்து மகனுமான மதன் கார்க்கி தனது நண்பர்களுடன் இணைந்து டூப்பாடூ என்ற இசை இணையதளத்தை இன்று தொடங்கினார். இதில் தனி நபர்களின் பாடல்கள் வெளியிடப்பட்டு. அதன் வருமானம் சம்பந்தப்பட்டவர்களுக்கே கிடைக்கும்படி செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த இணையதளத்திற்காகவே பாடல்களை உருவாக்கி உள்ளனர்.
இதுகுறித்து மதன் கார்க்கி கூறியதாவது:
சில முக்கிய காரணிகளை மனதில் வைத்து கொண்டு இந்தத் தளத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம். பாடல்கள் அனைத்தும், டூப்பாடூவுக்காகவே உருவாக்கப்பட்டவை. அவற்றை வேறு எங்கும் கேட்க இயலாது. இதில் வெளியாகும் பாடல்களுக்கு நாங்கள் உரிமை பெறுவதில்லை, இசையை உருவாக்கியவர்களிடமே அதன் உரிமை இருக்கும், இதன்மூலம், ஒவ்வொருமுறை அந்தப் பாடல்கள் கேட்கப்படும்போதும் அவர்கள் அதற்கான உரிமைத்தொகையைப் பெறுவார்கள்.
தற்போது முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், இமான், கார்த்திக், அனிருத் அண்ட்ரியா மற்றும் பலர் பாடல்களை டூப்பாடூவுக்காக உருவாக்கியுள்ளார்கள். வெளியிலிருந்து பார்க்கும்போது, இசைத்துறை பளபளப்பாகவும் கவர்ச்சிகரமாகவும் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதுவொரு நெருக்கடி நிலையில் உள்ளது வரவுப்பிரச்னை, மரியாதைப்பிரச்னை, நம்பிக்கைப்பிரச்சனை! இவை அனைத்திலும் இருந்து டூப்பாடூ இசை கலைஞர்களை தூக்கி நிறுத்தும் என எதிர் பார்க்கிறோம் என்கிறார் மதன் கார்க்கி.