மஹரகம பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழையின் போது ஆமைக் குஞ்சுகள் மேலிருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹரகம வத்தேகெதர கெமுனு வீதி இலக்கம் 227/25 என்ற முகவரியைக் கொண்ட வீட்டின் மீது நேற்று மாலை 4.30 மணியளவில் இவ்வாறு ஆமைக் குஞ்சுகள் விழுந்துள்ளன.
கடும் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் வானிலிருந்து கூரை மீத கடினமான பொருட்கள் விழும் சத்தம் கேட்டதாக வீட்டில் வசித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கூரையில் விழுந்த பொருட்கள் என்ன என்பதனை அறிந்து கொள்ள வெளியே வந்த போது சிறிய வகை உயிரினமொன்று கூரையிலிருந்து கீழே விழுவதனை அவதானித்துள்ளனர்.
அயலவர்களையும் அழைத்து அந்த வகை உயிரினம் என்ன என்பதனை அவதானித்த போது அவை சிறிய ரக ஆமைக் குஞ்சுகள் என கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வானிலிருந்து வீழ்ந்ததாகக் கூறப்படும் குறித்த வகை ஆமைகளை இன்று வீட்டு உரிமையாளர்கள் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.
எவ்வாறெனினும் பிரதேசத்தின் ஏனைய வீடுகள் அல்லது கட்டடங்கள் மீது இவ்வாறு ஆமைக் குஞ்சுகள் மேலிருந்து வீழந்ததாக பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.