இலங்கையில் போர் நடைபெற்ற நேரம் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா, விசுவமடு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனார்கள் என அவர்களது பெற்றோரால் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டினடிப்படையில் ஆணைக்கு மேற்கொண்ட விசாரணையினடிப்படையில் இவர்கள் மூவரும் 2008ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் மாலைதீவுக் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவரின் சகோதரி கருத்துத் தெரிவிக்கும்போது, தனது இளைய சகோதரன் 2005ஆம் ஆண்டு வீட்டைவிட்டு விளையாடச் சென்றிருந்தபோது காணாமல் போயிருந்ததாகவும் சம்பவம் நடைபெற்று ஆறு வருடங்களின் பின் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு தான் மாலைதீவு சிறையில் இருப்பதாக தெரிவித்தார் எனவும் அவர்களை நேரில் பார்த்துவிட்டு திரும்பிய கௌரிராஜா கவிதா தெரிவித்துள்ளார்.
தனது சகோதர் உட்பட மூன்று இளைஞர்களும் சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்சித், முத்துலிங்கம் யோகராஜா ஆகியோர் ஏன் இன்னமும் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற காரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.