தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
நட்சத்திர கிரிக்கெட் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் நடிகர் சங்கத்திற்கு பொறுப்பிற்கு வந்தபின்னர், முதற்கட்டமாக நடிகர் சங்கத்தின் நிலத்தை மீட்டனர். அதன்பின்னர் கட்டடம் கட்ட, நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.
நடிகர்கள் 8 அணிகளாக பிரிந்து விளையாடினார்கள். இந்த அணிகளுக்கு, சென்னை சிங்கம்ஸ், மதுரை காளைஸ், கோவை கிங்ஸ், நெல்லை டிராகன்ஸ், ராம்நாட் ரைனோஸ, தஞ்சை வாரியர்ஸ், சேலம் சீட்டாஸ், திருச்சி டைகர்ஸ் என பெயரிடப்பட்டு, இந்த அணிகளின் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
போட்டி துவங்கும் முன்னர் தமிழ்தாய் வாழ்த்து மற்றும் நாதஸ்வரம், மேளம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளுடன் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ரஜினி, கமல், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், பாலகிருஷ்ணா ஆகியோர் கூட்டாக வழங்கினர்
முதல்போட்டியை நடிகர்கள் ரஜினி-கமல் இருவரும் டாஸ் போட்டு போட்டியை துவக்கி வைத்தனர். 8 அணிகள் மோதிய இப்போட்டிகள், 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக அமைந்தது. முதல்போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும், சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணியும் மோதின. இதில் சூர்யா அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து மற்ற அணிகளும் விளையாடின. அரையிறுதி போட்டிக்கு சூர்யா, ஆர்யா, ஜீவா மற்றும் விஜய் சேதுபதி அணிகள் தகுதிபெற்றன.
முதலாவது அரையிறுதி போட்டியில் சூர்யா அணியும், ஆர்யா அணியும் மோதின. இதில் சூர்யா அணி வெற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் விஜய்சேதுபதி அணியும், ஜீவா அணிகளும் மோதின. இதில் ஜீவா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிபோட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும், ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அணியும் மோதினர். 6 ஓவர் கொண்ட போட்டியாக நடந்த இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஜீவா தலைமையிலான தஞ்சை அணி, 6ஓவரில் 83 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சூர்யாவின் சென்னை அணி, 5 ஓவரிலேயே 84 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், நட்சத்திர கோப்பையையும் தட்டிச்சென்றது.
தென்னிந்திய நடிகர் சங்க நட்சத்திர கிரிக்கெட்டிற்கு மலையாளத்திலிருந்து மம்முட்டி, நிவின்பாலி, தெலுங்கிலிருந்து பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ஸ்ரீகாந்த், கன்னடத்திலிருந்து சிவராஜ்குமார், புனீத்ராஜ்குமார், சுதீப், அம்ரீஷ் உள்ளிட்ட நடிகர்கள் வந்திருந்தனர். ஆனால் இங்கிருக்கும் விஜய், அஜித், சிம்பு, த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.