காவல்துறை நிலையத்திலேயே திருட்டு – 5 பிஸ்ரல் மாயம்!

மாத்தளை லக்கல காவல்துறை நிலையத்தில் பாதுகாப்புப் பெட்டி ஒன்றில் பாதுகாப்பாக பூட்டிவைக்கப்பட்டிருந்த ஒரு ரி-56 துப்பாக்கியும், 5 கைத்துப்பாக்கிகளும் களவாடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை சாரம் மற்றும் சேட் அணிந்த ஒருவரால் பாதுகாப்புப் பெட்டியில் பூட்டிவைக்கப்பட்டிருந்த ரி-56துப்பாக்கி ஒன்றும், ஐந்து கைத்துப்பாகிகளும் களவாடப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர் லக்கல உப பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டி பூட்டப்பட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த திறப்பினை எடுத்து பெட்டியைத் திறந்து குறிப்பிட்ட பொருட்களைக் களவாடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற நேரத்தில் நான்கு காவல்துறையினர் கடமையிலீடுபட்டிருந்தனர் எனவும் அவர்கள் மதுபோதையில் இருந்தார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் நான்குபேரும் வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணையை நடாத்துமாறு காவல்துறை மா அதிபர் எஸ்.என். விக்கிரமசிங்க மேல்மாகாண காவல்துறை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை நடாத்துவதற்கு விசேட காவல்துறைக் குழுவொன்று மேல்மாகாணத்திற்கு புறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts