சம்பூர் அனல் மின் நிலைய விடயத்தில் இந்தியா மக்கள் நலன் கருதி சிந்தித்து செயற்படும் என நான் நம்புகின்றேன். இந்தியாவுடனும் இலங்கை அரசுடனும் பேச்சு நடத்தி இவ்விடயத்தில் நல்ல முடிவை நாம் காண்போம் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மூதூருக்கு நேற்று விஜயம் செய்த அவர் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பாகவும் சம்பூர் மக்களின் போராட்டம் குறித்தும் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் இங்கு மேலும் பேசுகையில்,
சம்பூர் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் அவை முதலீட்டுச் சபையினூடாக தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்தன. அதில் 818 ஏக்கர் காணிகளை முதலில் நாம் விடுவிக்க முடிந்தது. பின்னர் கடற்படையினர் வைத்திருந்த 237 ஏக்கர் காணியையும் படையினரிடமிருந்து விடுவிக்க முடிந்தது.
தற்போது அங்கு இந்தியாவின் உதவியுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.அது தொடர்பான பிரச்சினை சிக்கல்கள் மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயங்களில் எமது மக்களுக்கு பாதிப்புள்ளது. இதில் பல பிரச்சினைகள் உள்ளமை தொடர்பில் மக்கள் விடயங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விடயத்தைப் பொறுத்தவரை இதனை நாம் பக்குவமாகவும் நிதானமாகவும் அணுக வேண்டும். ஏனெனில் இந்தியா இத்திட்டத்தை அமைக்கவுள்ளது. இந்தியா எமக்கு பலவகையிலும் உதவுகின்ற நாடாகும் . எனினும் மக்கள் இத்திட்டத்தினால் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விடயத்தை இந்தியாவும் ஆராயும் என நான் நம்புகின்றேன்.
இவ்விடயம் தொடர்பில் நாம் இந்தியாவுடனும் இலங்கை அரசுடனும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடனும் பேசி ஒரு முடிவைக் காண்போம்.அதற்காக எவரும் அவசரப்படக் கூடாது. ஒருவருடன் கவலையளிக்கும் வகையில் நாம் செயற்பட முடியாது. இந்தியாவின் உதவியை நாம் உதாசீனம் செய்ய முடியாது. இந்தியா பல விடயங்களில் பல சந்தர்ப்பங்களில் எமக்குதவியுள்ளது.
எனவே எமது மக்கள் நிதானமாக சிந்தித்து பக்குவமாக செயற்பட வேண்டும். இந்தியாவும் இந்த மக்களின் பிரச்சினையை ஆராய்ந்து நல்ல முடிவை எடுக்கும் என நான் நம்புகின்றேன் என்றார்.