இந்திய, சீன கூட்டுத் தயாரிப்பான குங்பூ யோகா திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதுவரை சீனாவில் நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது.
கதைப்படி, ஒரு புதயலைத்தேடி ஜாக்கிசான் இந்தியா வருகிறார். ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள ஒரு பழமையான அரண்மணையில் அந்த புதையல் இருக்கிறது. இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரமாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் முடிவிலும் படப்பிடிப்பு நடந்த இடத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்றிவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்புகிறாராம் ஜாக்கிசான். அதோடு அன்றைய தினம் நன்றாக பணிசெய்த தொழிலாளர்களை அழைத்து அவர்களுக்கு ரொக்க பரிசு கொடுத்து ஊக்குவிக்கிறாராம். அனைவருடனும் அமர்ந்துதான் உணவு அருந்துகிறாராம். கேரவன் இருந்தும் அதனை உடை மாற்ற மட்டுமே உபயோகப்படுத்துகிறாராம். உலக சூப்பர் ஸ்டார் ஒருவர் இப்படி நடந்து கொள்வது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதில் ஜாக்கிசான் குங்பூ மற்றும் யோகா கலை நிபுணராகவும் தொல்லியல் ஆய்வாளராகவும் நடிக்கிறார். அவருக்கு உதவும் இந்திய ஆய்வாளராக அமைரா தஸ்தூர் நடிக்கிறார், சோனுசூட் வில்லன். ஸ்டேன்லி டாங் இயக்குகிறார்.