முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் நோக்குடன் வாடிகளை அமைக்க வந்த முப்பதுக்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களுக்கும் கொக்கிளாய் கிராம வாசிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்றப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
நேற்று மாலை 5 மணியளவில் இராணுவத்தின் அனுசரணையுடன் தென்னிலங்கையை சேர்ந்த முப்பதுக்கும் மேற்ப்பட்ட சிங்கள மீனவர்கள் கொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமாக வாடிகளை அமைக்க வருகை தந்திருந்த வேளை, அப்பகுதி மக்களும் கிராம சேவையாளர்களும் அங்கு சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இதன்போது அங்கு நின்ற சிங்கள மீனவர்களுக்கு ஆதரவான இராணுவம் என சந்தேகிக்கப்படுபவர்களால் கொக்கிளாய் பகுதியை சேர்ந்த இரு கிராம சேவகர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தாக்கப்பட்ட கிராம சேவகர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து,
அங்கு வருகை தந்த அனைத்து சிங்கள மீனவர்களும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது .
தாக்கப்பட்ட கிராம சேவகர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .