வட மாகாண சபையினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் தீர்வு யோசனை தெற்கில் இனவாதத்தைத் தூண்டிவிடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். “யுத்தம் நிறைவுக்கு வந்து நாட்டில் நல்லிணக்கம் உருவாகி வரும் நிலையில் வட மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனை காலத்துக்கு பொருத்தமற்றது.” என்றும் அவர் கூறினார்.
“வட மாகாண சபையில் முன்மொழியப்பட்டுள்ள இந்த யோசனைக்காக நாம் மனம் வருந்துகின்றோம். இது உண்மையில் தவிர்க்கப்பட வேண்டியதொரு விடயமாகும். இனவாதத்தை மாத்திரமே நோக்காக கொண்டு செயற்படும் வட மாகாண சபை உறுப்பினர்களின் இந்த யோசனையானது அப்பாவி தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டில் வாழும் அனைவரையும் ஒரு இலங்கையர் என்ற நிலைப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பகிர்வுக்கு அதிகூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறானதொரு முன்மொழிவு அனைத்து முயற்சிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும்.
நிச்சயமாக தென் மாகாண மக்கள் இதனை வித்தியாசமான கோணத்திலேயே பார்ப்பார்கள். இதனால் அநாவசியமாக இனவாதம் தூண்டப்படுவதற்கு சந்தர்ப்பம் உண்டு. எனவே இது காலத்துக்கு சிறிதும் பொருத்தமில்லாததொரு யோசனை. வடக்கு, கிழக்கில் கூடுதலான அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி எமக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஒவ்வொரு அமைச்சும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் ஆகக் குறைந்தது 02 இலட்சத்தையேனும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்திகளுக்காக செலவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நாம் இனவாதத்தை மறந்து ஒரு நாடு என்ற நினைப்பில் செயற்பட்டு வரும் நிலையில் இவ்வாறானதொரு தீர்மானம் தேவையற்றது.” என்றும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டார்.