Ad Widget

பொருத்து வீட்டுத் திட்டம்: உடன் இடைநிறுத்த ஜனாதிபதி பணிப்பு!

பொருத்து வீட்டுத் திட்டப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், மீளாய்வின் பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெற்றது. இதன்போது பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்புக்கள் வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில் இந்த வீட்டுத் திட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறும், அதுவரையில் தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் 21 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. முன்னோடியாக இரண்டு வீடுகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டுத் திட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு வடக்கு மாகாண சபை கடந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. காலநிலைக்கு ஒவ்வாததாகவும், பாதுகாப்பற்றதாகவும், அதிக செலவினை உடையதாகவும் இந்த வீடுகள் இருப்பதாக, வடக்கு மாகாண சபை தீர்மானத்தில் சுட்டிக்காட்டியிருந்தது. இந்தத் தீர்மானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 65 ஆயிரம் பொருத்து வீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தத் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தப் பொருத்து வீட்டுத் திட்டப் பணிகளை மீளாய்வு செய்ய நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

Related Posts