போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கும் பங்களிப்புச் செய்யும் எல்லா அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி விருதுகள் வழங்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பங்களிப்புகளை வழங்கும் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பில் முன்னுரிமை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை குருநாகல் மாளிகாபிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
‘போதைப்பொருளில் இருந்து விடுதலைப் பெற்ற நாடு’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் 5ஆவது கட்டம் குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நிகழ்வு குருநாகலை மாளிகாபிட்டிய விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
இன்று முழு உலகிற்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் எல்லோரும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருளில் இருந்து விடுதலைப் பெற்ற நாட்டை உருவாக்க வேண்டுமானால் முதலில் போதைப்பொருளில் இருந்து விடுதலை பெற்ற ஒரு குடும்பம் உருவாக வேண்டும் என்றும், எல்லா குடும்பங்களும் போதைப்பொருளில் இருந்து விடுதலை பெறுகின்றபோது போதைப்பொருளில் இருந்து விடுதலை பெற்ற ஒரு கிராமத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும், அதன்மூலம் போதைப்பொருளிலிருந்து விடுதலை பெற்ற ஒரு நாடு உருவாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
‘போதைப்பொருளில் இருந்து விடுதலைப் பெற்ற நாடு’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச அதிகாரிகளுக்கு அதிக பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பில் நாளாந்தம் சில மணி நேரங்களை ஒதுக்கி அதற்கு நேரடியான பங்களிப்பை வழங்குவதற்கு பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களின்போது குறித்த மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட வேண்டும் என தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தில் மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள், அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேக்கர, எஸ்.பி.நாவின்ன, இராஜாங்க அமைச்சர் ரி.பீ.ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, வட மேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, ஜனாதிபதியின் விசேட கருத்திட்டப் பணிப்பாளர் சாந்த பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.