என்னை அழைத்த சீ.ஐ.டி சிவாஜிலிங்கத்தை அழைக்கவில்லை! -பீரிஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் விவசாயிகளுக்கான உற்சவத்திற்காக மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வுக்கான உணவு, அலங்காரம், பஸ்களில் ஆட்களை அழைத்து வருதல் மற்றும் பரிசுப் பொருட்களுக்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான விலைப் பட்டியல் தன்வசம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்துக்கு வரும் முன்னர் தம்மை எளியவர்கள் எனக் கூறிய தலைவர்களின் எளிமை இப்போது புலனாவதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட பின்னரும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது எனவும், இது பற்றி பேசிய தன்னை இரகசியப் பொலிஸூக்கு அழைத்ததாகவும் எனினும் இது பற்றி பேசிய சிவாஜிலிங்கத்தை அவ்வாறு அழைக்கவில்லை எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வருவது தேசிய அரசாங்கம் இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே எனவும் குறிப்பிட்ட பீரிஸ், பிரதமர் தனக்கு தேவையான விதத்தில் அமைச்சு மற்றும் நிறுவனங்களுக்கு நியமனங்களை வழங்கி தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை மீறுவதாகவும் அதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்ப்பு வௌியிடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

Related Posts