உலக இருபதுக்கு-20 தொடரில் இலங்கை அணிக்குப் பெறப்பட்ட தோல்விகளுக்கும் அத்தொடருக்காக இலங்கைக் குழாமில் லஹிரு திரிமான்ன சேர்க்கப்பட்டமைக்குமான பொறுப்பை ஏற்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளரும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
உலக இருபதுக்கு-20 தொடரில், நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணி, சுப்பர் 10 சுற்றோடு வெளியேற்றப்பட்டது. அதில், 4 போட்டிகளில் பங்குபற்றி, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மாத்திரமே அவ்வணி வெற்றிபெற்றிருந்தது.
இந்தத் தொடருக்கான குழாமைத் தெரிவுசெய்வதற்கான பொறுப்பு, இத்தொடருக்காக இலங்கைக் குழாம் இந்தியாவுக்குச் செல்வதற்கு முதல்நாளிலேயே அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டதோடு, இலங்கை அணி புறப்பட்ட நாளிலேயே, இலங்கையின் குழாம் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
முன்னர் தெரிவுசெய்யப்பட்டிருந்த குழாமில், லஹிரு திரிமான்ன தெரிவுசெய்யப்பட்டிருக்கவில்லை என்பதோடு, நிரோஷன் டிக்வெல்லவை நீக்கியே, திரிமான்ன, இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். தவிர, குழாமிலிருந்து நீக்கப்பட்ட ஜெப்றி வன்டர்சே, அதன்பின், லசித் மலிங்கவின் காயத்துக்குப் பின்னர், குழாமில் சேர்க்கப்பட்டதோடு, மிகச்சிறப்பாகப் பந்துவீசியிருந்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அரவிந்த டி சில்வா, இலங்கை அணியில் நுட்ப ரீதியாகத் துடுப்பெடுத்தாடக்கூடிய சிறந்த துடுப்பாட்ட வீரராக லஹிரு திரிமான்ன காணப்படுவதாகவும், அவருக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். அத்தோடு, லஹிரு திரிமான்னவைக் குழாமில் சேர்த்தமைக்கானதும் உலக இருபதுக்கு-20 தொடரில் இலங்கையின் தோல்விகளுக்கும் பொறுப்பேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அரவிந்த,
இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு, கிரிக்கெட் செயற்குழுவொன்று உருவாக்கப்பட்டு, ஐந்தாண்டுகாலத் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென ஆலோசனை வழங்கினார். அத்தோடு, இம்மாதம் 30ஆம் திகதிவரை மாத்திரமே இப்பதவியில் தான் காணப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலக இருபதுக்கு-20 தொடருக்காகச் சேர்க்கப்பட்ட லசித் மலிங்க, முதலாவது போட்டிக்குப் பின்னர், உடற்றகுதியின்மை காரணமாக குழாமிலிருந்து நீக்கப்பட்டதோடு, அக்காலங்களின்போது கருத்துத் தெரிவித்திருந்த மலிங்க, தனக்குப் போதிய உடற்றகுதி காணப்படவில்லை எனத் தெரிவித்த போதிலும், குழாமில் தான் சேர்க்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அரவிந்த, தான் உடற்றகுதியுடன் இருக்கிறார் என லசித் மலிங்க அனுப்பிய மின்னஞ்சலொன்று இருப்பதாகத் தெரிவித்ததோடு, ‘என்ன போட்டிகளுக்காக எப்போது அவர் உடற்றகுதி அடைகிறார் என்பதைப் பார்ப்போம்” என, ஐ.பி.எல் போட்டிகளில் லசித் மலிங்க பங்குபற்றுவார் என, மறைமுகமாகத் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் சபையின் இவ்வாண்டுக்கான தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்கவும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை கிரிக்கெட் சபை கலைக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.