மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட 69 ஆயிரத்து 992 ஏக்கர் நிலப் பரப்பில், மைத்திரி அரசு 2 ஆயிரத்து 565.5 ஏக்கரை மாத்திரமே விடுவித்துள்ளது.
இது அபகரிக்கப்பட்ட நிலப் பரப்பின் 3.6 சதவீதமாகும் என்று பிரிட்டன் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
“இலங்கை அரசின் மீது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக இலங்கையின் புதிய அரசு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் சில பகுதிகளை மட்டும் 2015 ஆம் ஆண்டு தமிழர்களிடம் மீள ஒப்படைத்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றியது.
எனினும், புதிய அரசு புனரமைப்பு மற்றும் நட்டஈடு வழங்கல் என்னும் போர்வையில் மீண்டும் தமிழரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் வட மாகாணத்தில் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. எனினும், உண்மையான தரவுகளின்படி 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 67 ஆயிரத்து 427 ஏக்கர் நிலப்பகுதி வட மாகாணத்தில் அபகரிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் தமிழர் பிரதேசத்தில் அபகரிப்பு செயப்பட்ட 69 ஆயிரத்து 992 ஏக்கர் நிலப் பகுதியில், இதுவரை புதிய அரசினால் 2 ஆயிரத்து 565.5 ஏக்கர் நிலப்பகுதி மட்டுமே ஆட்சி மாற்றத்தின் விடுவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசு ஐ.நா சபையின் தீர்மானத்தின் பிரகாரமும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையிலும் தமிழர் பிரதேசத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழர் நிலங்களை மீள ஒப்படைப்பதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் பிரிட்டன் அரசிடம் பிரிட்டன் தமிழர் பேரவை கோரிக்கையை முன்வைத்துள்ளது” – என்று பிரிட்டன் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.