சாவகச்சேரி சந்தேக நபர் இதுவரை கொழும்புக்குக் கொண்டுவரப்படவில்லை

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்னமும் கொழும்புக்கு கொண்டுவரப்படவில்லையெனவும் அவர் வவுனியாவில் வைத்தே விசாரணை செய்யப்படுவதாகவும் சிறீலங்காக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைது தொடர்பாக கடந்த திங்கட் கிழமை தீவிர விசாரணைப் பிரிவின் ஆய்வாளர் இந்துனில் கொழும்பு நீதிமன்ற நீதவான் அருணி ஆட்டிக்கல முன்னிலையில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

யாழ்ப்பாணக் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவின் உதவி ஆய்வாளர் தர்மசேனவின் முறைப்பாட்டுக்கமைய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகக் கூறி, சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிமருந்துகள் தொடர்பான விபரங்களை ஆய்வாளர் இந்துனில் வெளியிட்டார்.

இந்த அறிக்கையின்படி, எஸ்.பீ. ஆர்.024/ஏ சிறிய ரக தற்கொலை அங்கி- ஒன்று, சீ.ஓ.303, சீ.ஓ.299, சீ.ஓ.290, சீ.ஓ.399 ஆகிய இலக்கங்களைக் கொண்ட கிளைமோர் ரக குண்டுகள் -நான்கு, எஸ்.எம்.001, எஸ்.எம்.002 ஆகிய இலக்கங்களைக் கொன்ட மக்னட் குண்டு பெட்டிகள் – இரண்டு, 9 மி.மீ ரக ரவைகள்- 50 அடங்கிய இரு பெட்டிகள், ரி.என்.டி. அதி சக்திவாய்ந்த வெடி பொருட்கள் அடங்கியதாக கருதப்படும் இரு பொதிகள், சிலிக்கன் மணல் பொதிகள் இரண்டு மற்றும் அந்த பொருட்கள் மறைக்கப்பட்டிருந்த 2008 ஆம் ஆண்டின் ஜனவரி 29 ஆம் நாளுக்குரிய சிங்கள நாளேடு ஒன்றின் இரு பக்கங்கள் ஆகியன குறித்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை அங்கியும், வெடிக்கக்கூடிய நிலையில் இருந்த இரண்டு குண்டுகளும் சிறப்பு அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சாவகச்சேரி வெல்லன்குளம், பிள்ளையார் வீதி, மறவன்புலவு மத்தி, மறவன்புலவு எனும் விலாசத்தில் வசித்துவந்த எட்வேட் ஜூலியன் என அழைக்கப்படும் ரமேஸ் என்பவரை சாவகச்சேரி தீவிர விசாரணைப்பிரிவினர் தீவிரவாத விசாரணைப் பிரிவினரிடம் கையளித்துள்ளதாகவும் அவர் இன்னமும் கொழும்புக்கு கொண்டுவரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஆராய்ந்த அருணி ஆட்டிக்கல தற்கொலை அங்கி உட்பட ஏனைய வெடிபொருட்களையும் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு தெரிவித்ததுடன் மேலதிக விசாரணையை எதிர்வரும் 20 திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதனிடைய, சாவகச்சேரியில் கைதுசெய்யப்பட்ட நபர் தற்போது தீவிரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வவுனியாவில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பெரும்பாலும் அவர் இன்று கொழும்புக்குக் கொண்டுவரப்படலாம் எனவும் தீவிரவாதப் விசாரணைப் பிரிவின் உயர் காவல்துறை அகதிகாரி ஒருவர் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Related Posts