இலங்கையின் வடக்குப் பகுதி மீனவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை முல்லைத்தீவில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அளித்துள்ளார்.
முல்லைத்தீவில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடி ஆராய்ந்ததன் பின்னர் அதற்கு தீர்வு காணும் நோக்கில் குழு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.
அரசாங்க அனுமதி பெற்ற வெளிமாவட்ட மீனவர்கள் மாத்திரமல்லாமல் அத்துமீறி வருபவர்களும் அங்கு வந்து தங்கியிருந்து மீன் பிடியில் ஈடுபடுவதனால் தாம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர்.
மீனவர்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அமைச்சர் படையதிகாரிகளிடமும் அரச அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்டதுடன், சட்டவிரோத மீன்பிடியையும், அனுமதியின்றி மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடியையும் அனுமதிக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார் என மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
வெளிமாவட்ட மீனவர்கள் மட்டுமன்றி, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி இந்திய மீனவர்கள் நுழைந்து தமது வளங்களைச் சுரண்டி வாழ்வாதாரங்களை பாதிப்பதாக வட இலங்கை மீனவர்கள் பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டுகின்றனர்.