20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை தனதாக்கி வரலாறு படைத்துள்ளது.
5–வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று பிற்பகல் நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின.
இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனை அலிசா ஹீலே 4 ரன்னில் வெளியேறினாலும், எலிசி விலானியும் (52 ரன், 37 பந்து, 9 பவுண்டரி), கேப்டன் மெக் லானிங்கும் (52 ரன், 49 பந்து, 8 பவுண்டரி) அரைசதம் அடித்து அணிக்கு வலு சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 160 ரன்களை தாண்டுவது போல் சென்ற ஆஸ்திரேலிய அணி, இறுதி கட்டத்தில் சொதப்பி விட்டது. குறிப்பாக 18–வது ஓவரில் 4 ரன்னும், 20–வது ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டோட்டின் 2 விக்கெட்டுகளும், மேத்யூஸ், அனிசா முகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 149 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீசின் தொடக்க வீராங்கனைகளாக ஹாய்லே மேத்யூசும், கேப்டன் ஸ்டெபானி டெய்லரும் களம் இறங்கினர். ஆஸ்திரேலிய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடிய இவர்கள் தேவைக்கு ஏற்ப ரன்களை சேகரித்து வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். 15–வது ஓவர் வரை இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.
அணியின் ஸ்கோர் 120 ரன்களாக உயர்ந்த போது, தனது முதலாவது அரைசதத்தை எட்டிய மேத்யூஸ் 66 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். இந்த இணை திரட்டிய 120 ரன்களே 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜோடியின் அதிகபட்சமாகும். கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 59 ரன்களில் (57 பந்து, 6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்ட போது, 3–வது பந்தில் இலக்கை எட்டிப்பிடித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கையில் ஏந்தியது. வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை மேத்யூஸ் ஆட்டநாயகி விருதையும், ஆல்–ரவுண்டராக முத்திரை பதித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்டெபானி டெய்லர் தொடர் நாயகி (246 ரன் மற்றும் 8 விக்கெட்) விருதையும் பெற்றனர்.
இதன் மூலம் 2010, 2012, 2014–ம் ஆண்டுகளில் தொடர்ந்து உலக சாம்பியனாக வலம் வந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன்பது 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அதில் பெற்ற ஒரே வெற்றி இது தான். வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் உற்சாகமாக நடனமாடி வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த ஆட்டதை நேரில் ரசித்துக் கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், தங்கள் அணி வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.