20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீசும், இங்கிலாந்தும் கோதாவில் இறங்கின. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி பந்து வீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து கேப்டன் மோர்கனும் முதலில் பந்து வீசுவதற்கே ஆசைப்பட்டதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து ஜாசன் ராயும், அலெக்ஸ் ஹாலசும் இங்கிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர். ஆரம்பமே இங்கிலாந்துக்கு பேரிடியாக விழுந்தது. சுழற்பந்து வீச்சாளர் பத்ரீ வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ஜாசன் ராய்க்கு (0) ‘லெக்-ஸ்டம்பு’ பிடுங்கியது. அடுத்த ஓவரில் ஹாலசும் (1 ரன்) நடையை கட்டினார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கேப்டன் மோர்கனும் (5 ரன்) பத்ரீயின் சுழலில் ‘ஸ்லிப்’பில் நின்ற கெய்லிடம் கேட்ச் ஆகிப் போனார்.
ஆடுகளம் பந்து வீச்சுக்கு போதிய அளவுக்கு ஒத்துழைக்காத நிலையிலும் பத்ரீ அபாரமாக பந்து வீசி, இங்கிலாந்தை நெருக்கடி வளையத்தில் சிக்க வைத்தார். 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்த இங்கிலாந்து அணியை 4-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜோ ரூட்டும், ஜோஸ் பட்லரும் படிப்படியாக மீட்டனர். அதிரடி சூரர்களான இவர்கள் ரன்ரேட்டை உயர்த்துவதிலும் கவனம் செலுத்த தவறவில்லை. சுலிமான் பென்னின் ஓவரில் பட்லர் 2 சிக்சர்களை பறக்க விட்டு, ரசிகர்களை மகிழ்வித்தார்.
11 ஓவர்களில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 83 ரன்களுடன் ஓரளவு நல்ல நிலையை எட்டியதை பார்த்த போது 170 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் இந்த ஜோடிக்கு, பிராத்வெய்ட் சரியான நேரத்தில் ‘வேட்டு’ வைக்க இங்கிலாந்து மீண்டும் சரிவுப்பாதைக்கு தள்ளப்பட்டது. ஜோஸ் பட்லர் 36 ரன்களிலும் (22 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), 4-வது அரைசதத்தை கடந்த ஜோ ரூட் 54 ரன்களிலும் (36 பந்து, 7 பவுண்டரி) அவரது பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நெருக்கடியில் விளையாடி, விக்கெட்டுகளை மளமளவென தாரை வார்த்ததால் ரன்வேகம் கொஞ்சம் தளர்ந்து போனது. கடைசி கட்டத்தில் டேவிட் வில்லி 14 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 21 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணிக்கு சற்று ஆறுதல் அளித்தார்.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், ஜான்சன் சார்லசும் களம் புகுந்தனர்.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் 2-வது ஓவரிலேயே பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஜோ ரூட்டை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கொண்டு வந்தார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. அவரது பந்து வீச்சில் சார்லஸ் (1 ரன்) கேட்ச் ஆனார். பிறகு அவரது பந்தை எதிர்கொண்ட கெய்ல் (4 ரன்) ஒரு பவுண்டரி அடித்த பின்னர் மீண்டும் தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே சிக்கினார். அடுத்து இறங்கிய முந்தைய ஆட்டத்தின் ’ஹீரோ’ லென்டில் சிமோன்ஸ் இதில் ‘ஜீரோ’வாகிப் போனார். இங்கிலாந்தை போன்றே இவர்களும் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தனர்.
இந்த இக்கட்டான கட்டத்தில் சாமுவேல்சும், வெய்ன் பிராவோவும் இணைந்து நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டனர். சாமுவேல்ஸ் 27 ரன்களில் இருந்த போது விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆகி, பெவிலியன் நோக்கி சிறிது தூரம் நடந்து விட்டார். ஆனால் டி.வி. ரீப்ளேயில், பட்லர் பந்தை தரையோடு பிடிப்பது தெரிய வந்ததால் சாமுவேல்ஸ் தொடர்ந்து பேட் செய்யும் அதிர்ஷ்டத்தை பெற்றார்.
அதே நேரத்தில் ரன்தேவை அதிகமானால் வெஸ்ட்இண்டீஸ் நெருக்கடிக்குள்ளானது. இங்கிலாந்து பவுலர்கள் பெரும்பாலும் ஸ்டம்பை குறி வைத்து வீசி ஓரளவு கட்டுப்படுத்தினர். பிராவோ 25 ரன்களிலும், ரஸ்செல் ஒரு ரன்னிலும், கேப்டன் டேரன் சேமி 2 ரன்னிலும் வெளியேற, இங்கிலாந்தின் கை ஓங்குவது போல் தெரிந்தது. ஆனால் மறுமுனையில் நம்பிக்கையை இழக்காமல் சாமுவேல்ஸ் தனிநபராக ‘தூண்’ போல் நிலைத்து நின்று போராடி கொண்டிருந்தார்.
கடைசி 2 ஓவர்களில் வெஸ்ட்இண்டீசின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. சாமுவேல்சும், பிராத்வெய்ட்டும் களத்தில் நின்றனர். 19-வது ஓவரை வீசிய ஜோர்டான் 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.
வெற்றிக்கனி எந்த பக்கம் கனியுமோ? என்ற பரபரப்பான சூழல் நிலவியது. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் வீசினார். இதை எதிர்கொண்ட பிராத்வெய்ட் ஒன்றல்ல…இரண்டல்ல…. முதல் 4 பந்துகளையும் வரிசையாக சிக்சருக்கு விரட்டியடித்து பிரமிப்பூட்டினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து, உலக மகுடத்தை சூடியது.
சாமுவேல்ஸ் 85 ரன்களுடனும் (66 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), பிராத்வெய்ட் 34 ரன்களுடனும் (10 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் உலக கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2012-ம் ஆண்டு வென்று இருந்தது. இதன் மூலம் 20 ஓவர் உலக கோப்பையை இரண்டு முறை சுவைத்த முதல் அணி என்ற சரித்திர சாதனையை பதிவு செய்தது. 2012-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போதும், அதில் சாமுவேல்ஸ் தான் வெற்றிக்கு (அப்போது 78 ரன்) பக்கபலமாக இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
சாமுவேல்ஸ் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் 3 அரைசதம் உள்பட 273 ரன்கள் குவித்த இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.