மாகாண முதலமைச்சர்களிடம் புதிய அரசியலமைப்பிற்கான கருத்துக்களை பெற்றுக்கொள்ள தீர்மானம்

மாகாண முதலமைச்சர்களிடம் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழு தீர்மானித்துள்ளது.

மக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக அந்த குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

5000 இற்கும் அதிகமான யோசனைகளை பதிவுசெய்துள்ளதாக அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் தலைவர் கூறினார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதகுருமார்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரிடமும் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டார்.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளபோதிலும், அந்த தரப்புகளிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து யோசனைகள் தொடர்பிலும் தனித்தனியாக ஆராய்ந்து இந்த மாதத்திற்குள் அறிக்கையை தயாரிப்பதற்கு எண்ணியுள்ளதாக குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts