20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சமி பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின்(89 ரன்கள்) அதிரடி ஆட்டத்தின் உதவியால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயில் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் சார்லஸ் அதிரடி காட்டினார். இந்திய பந்து வீச்சை சகட்டு மேனிக்கு விளாசிய இவர், பவுண்டரிகளும் சிக்சருமாக அடித்து வான வேடிக்கை நிகழ்த்தினார். இதனால், அந்த அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருந்தது. 52 ரன்கள் குவித்த சார்லஸ் விராட் கோலி பந்தில் ஆட்டமிழந்தார். இருமுறை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய சிம்மன்ஸ் (83 ரன்கள்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.