வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து இணங்காணப்பட்ட மேலும் சில பகுதிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கான விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியினை அண்மித்த பகுதிகள் குறிப்பாக நடேஸ்வராக் கனிஸ்ர வித்தியாலையத்தின் பின்புறத்தில் இருந்து இராணுவத்தின் தல்சவென கோட்டல் வரையிலான சில பகுதிகள் விடுவிப்பதற்கு படைத்தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
முன்பு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள படை முகாம்களை அகற்றுவதில் தாமதங்கள் இருப்பதால் இராணுவத்தினரால் ஒருவார கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது இருந்த போதும் காணிகள் விடுவிப்பதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட மக்கள் தமது காணிகளுக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் மக்கள் சென்று குடியேறிக் கொள்வது தொடர்பாக படைத்தரப்பினருக்கும் தெல்லிப்பளை பிரதேச செயலருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றிருந்தது.
இக் கலந்துரையாடலின் போது விடுவிக்கப்பட்ட காணிகளில் எதிர்வரும் வார இறுதிக்குள் மக்கள் குடியேறிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் பூரணப்படுத்தப்படும் என்று படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இரு பாடசாலைகளையும் இயங்க வைப்பது, மாணவர்களுடைய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பிற்காக நடேஸ்வர கனிஸ்ர வித்தியாலையத்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலைய வேலிகளை பின்னகர்த்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது