கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல்களுடன் தொடர்புபட்ட தடயங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படும் வெலிசறை கடற்படை முகாமின் இரகசிய அறை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த அறை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதில் கடத்தப்பட்டவர்களுக்கு சொந்தமான வாகனங்கள் துண்டுதுண்டுகளாக வேறாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நேற்று புதன்கிழமை கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு மேலதிக அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வா அடுத்த வாரம் அந்த அறையை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக மன்றில் அறிவித்தார்.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட, தனது பாதுகாப்பு உத்தியோகத்தரான நேவி சம்பத் எனப்படும் லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க புலிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறி அவருக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றின் பதில் நீதிவான் ஜயந்த டயஸ் நாணயக்கார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன் போதே கடந்த தவணையில் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய நேற்று மன்றில் முன்னிலையான விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா, தனது மேலதிக விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்தே மேற்படி இரகசிய அறை தொடர்பிலான விடயங்களை கூறினார்.
இதன் போது இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ள கடற்படை லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க மன்றில் ஆஜராகியிருந்தார். பாதிக்கப்பட்ட தரப்பான ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் உறவினர்களும் அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவும் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை மே 18ஆம் திகதிவரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி இரவு தெஹிவளை, பெர்னாண்டோ மாவத்தையில் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்களும், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர் கடற்படையின் கடத்தல் குழுவொன்றினால் கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட குறித்த 11 பேரும் வெலிசறை, கோட்டை மற்றும் திருகோணமலை கன்சைட் நிலத்தடி முகாம் ஆகிய கடற்படையின் கட்டுப்பாட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமையும் பலரிடம் விடுதலை தொடர்பில் கப்பம் கோரப்பட்டுள்ளமையும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இந் நிலையிலேயே இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.