இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதனை தமிழ் நாட்டில் இயங்கும் பல அமைப்புக்கள் எதிப்பு தெரிவிக்கின்றனர். அந்த வகையில் முருகசேனை என்னும் அமைப்பு விடுத்துள்ள கண்டண அறிக்கை…
தனது இசை வளத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மதிமயக்கிய இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் தேதியன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். “வெள்ளை பூக்கள் (White Flowers), “நல்லிணக்க நிகழ்வு” என்ற அடிப்படையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாகவும், மேலும் இதில் அந்நாட்டின் தலைவர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் அறிகிறோம்.
2009 ல், உலகமே கண்டிராத அளவிற்கு கொத்துக்குண்டுகளையும், வேதிக்குண்டுகளையும் போட்டு 1.5 லட்சம் மக்களைக் கொன்ற இலங்கை இனவெறி அரசாங்கம், தனது தவறுகளை உலகின் பார்வையிலிருந்து மறைக்க தொடர்ந்து முயன்று வருகின்றது. திரையுலகைச் சார்ந்தவர்களை அழைத்து வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி உண்மையை மூடி மறைக்க முயன்று வருகின்றது.
நல்லிணக்க நாடகம்?
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க இதுவரை எந்த ஏற்பாடும் மேற்கொள்ளப்படாத இலங்கையில்…நிலப்பறிப்பு, உரிமைப்பறிப்பு, வன்புணர்வு உள்ளிட்ட அனைத்து மறைமுக இன அழிப்பு நடவடிக்கைகளும் தொடந்து கொண்டிருக்கும் இலங்கையில்…சர்வதேச விசாரனையை ஏற்க மறுப்பது, உண்மையை வெளியிடும் ஊடகங்களை நசுக்குவது, நடந்தது இனப்படுகொலை என்பதை எப்படியாவது மூடிமறைக்க முயலும் இலங்கையில்…நல்லிணக்கமும், குற்றவாளிகள் தண்டிக்கபடுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இன அழிப்பின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் சாத்தியமேயில்லை.
இப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலும், பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கிடைக்காமல் இருக்கும் இத்தருணத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது இலங்கை இனவெறி அரசின் நயவஞ்சக நாடகம் என்பதை தொடர்புடையவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலும் அவலக்குரலும் இசைச் சத்தத்திலும், ஆடல் பாடலிலும் உலகிற்குக் கேட்காமல் போகட்டும் என்று எண்ணுகின்றது. ஆனாலும், மனிதநேயமிக்க திரையுலக, இசையுலகக் கலைஞர்கள் இலங்கையின் சதியைப் புரிந்துகொண்டு அவற்றை புறக்கணித்து வருகின்றனர்.
2010 ல் கொழும்புவில் நடைபெற்ற IIFA விழா, அமிதாப்பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாலிவுட் திரைப்பட கலைஞர்களின் புறக்கணிப்பால் வெறிச்சோடியது. கடந்த ஆண்டு 2011 ஜூலை மாதம் கொழும்பு வரை சென்றுவிட்டு, இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பி வந்தனர் திரு.மனோ உள்ளிட்ட பாடகர்கள். ஈழத்தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கவேண்டும் என்னும் தாய் தமிழகத்து மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதோடு, தமிழ் நெஞ்சங்களுக்கு சிறு கஷ்டம் வருவது போலவும் நடக்க மாட்டோம் என்று பாடகர் மனோ அளித்த பேட்டி குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிக் மவுண்டெய்ன்’ என்னும் இசைக் குழு இலங்கையில் நடக்க இருந்த தனது இசை நிகழ்ச்சியை ரத்து செய்தது. தம்முடைய பயணமும், இசை நிகழ்ச்சியும், திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைக்க உதவும் என்பதாலேயே அதனை ரத்து செய்வதாக அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் போரின்போதும், போருக்கு பின்னரும் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்துவருவதால் 2013-ல் நடந்த காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் கனடா கலந்துகொள்ளாது என அப்போதைய பிரதமர் அறிவித்ததையும், இந்தியா சார்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதையும் பார்க்கவேண்டும்.
அன்றுதொட்டு இன்றுவரை புரட்சி போராட்டங்கள் பற்றிய எழுச்சியான கருத்துக்களை மக்கள்முன் பரப்புவதற்கு தெருக்கூத்தும் பாட்டும் ஓரங்க நாடகங்களும் உதவியது. அவ்வளவு ஆளுமை பாட்டுக்கும் நடிப்புக்கும் உண்டு. அதையே ஆயுதமாக்கி பெருத்த நட்சத்திர பட்டாளத்தை வைத்து கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி ஒரு போராட்ட வரலாற்றின் அடிநாதத்தை நிர்மூலம் செய்ய, அறிந்தோ அறியாமலோ இலங்கை இனவெறி அரசின் சூழ்ச்சியில் சிக்கி துணை போவது ஒருபோதும் தர்மமாக இருக்காது.
அமெரிக்க திரையுலகம் அந்நாட்டு அமெரிக்க பழங்குடியினரை நடத்தும் விதத்தை கண்டித்து “காட் பாதர்” படத்திற்காக 1973-ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை படத்தின் கதாநாயகன் மார்லன் பிராண்டோ, பெருந்தன்மையுடன் அளிக்கப்பட்டுள்ள இந்த விருதை ஏற்க இயலாததற்கு மிகவும் மனம் வருந்துவதாக குறிப்பிட்டதையும், மாந்தநேயம் பக்கம் நின்றதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.
இலங்கை மட்டுமின்றி, எங்கெல்லாம் மனித உரிமை மீறல்களும், இனப்படுகொலைகளும் அரங்கேறுகின்றனவோ, அவற்றையெல்லாம் புறக்கணிப்பதை மனித நேயமிக்க இசைக்கலைஞர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஏ. ஆர். ரஹ்மானின் இசையை எவ்வளவு மறக்கமுடியாதோ, அதைவிடவும் அதிகமாக தமிழீழ விடுதலைப் போரில் ஆகுதியாகிப்போன மாவீரர்களையும், ஈழப்படுகொலையையும் மறக்கமுடியாது என்பதே ஈழத்தமிழர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. எனவே ஒரு இனம் தனது விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான தருணத்தில், மாபெரும் இன அழிப்பை சந்தித்த, இன்னும் சத்தமில்லாமல் எதிர்கொண்டிருக்கிற இந்நேரத்தில் அவர்களின் போராட்டத்தையும் எதிர்கால அரசியலையும் பாதிக்கக்கூடிய ஒரு சதிக்கு ஏ. ஆர். ரஹ்மான் துணை போகலாமா என்ற மனச்சாட்சியான கேள்வியொன்றை மட்டும் அவர் முன்னிலையில் வைக்கமுடியும்.
இஸ்ரேலில் தான் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சியை தலைசிறந்த தபேலாக் கலைஞர் திரு. ஜாகிர் ஹுசைன் அவர்களும் ரத்து செய்தார். அறியாமல் ஒப்புக்கொண்டுவிட்ட நிகழ்ச்சிகளை, அவற்றின் உண்மையான நோக்கத்தை அறிந்த பிறகு ரத்து செய்த கலைஞர்கள் வரிசையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களும் தனது பயணத்தையும் நிகழ்ச்சியையும் ரத்து செய்து, தான் நீதியின் பக்கம் நிற்கும் மனிதநேயக் கலைஞன் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்.
– முருகசேனை