Ad Widget

புலிகளின் நகை தோண்டிய விவகாரம் அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு

வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க நகைகள் மற்றும் பணத்தை, சட்டவிரோதமாக தோண்டியவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் அறிக்கையை, ஒரு மாதகாலத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கு பருத்தித்துறை நீதவான் திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி மணற்காட்டுப் பகுதிக்குச் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவொன்று, விடுதலைப் புலிகள் காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் பணத்தை தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டனர். வெளிநாட்டிலுள்ள ஒருவரின் அறிவுறுத்தலுக்கமைய செயற்பட்ட இந்தக் குழு, தங்களை இரகசியப் பொலிஸார் என பொதுமக்கள் மத்தியில் அடையாளம் காட்டிக்கொண்டனர்.

இது தொடர்பில் அறிந்த பொலிஸார், அந்த இடத்தைச் சுற்றி வளைத்தபோது, தோண்டிக் கொண்டிருந்த நால்வரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். எனினும் அவர்கள் மாறுநாள் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேற்படி நபர்கள் தோண்டிய இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை நீதவான் விடுத்த உத்தரவுக்கமைய மேற்படி இடம் தோண்டப்பட்ட போதும், அங்கு எந்தப் புதையலும் இருக்கவில்லை.

சான்றுப் பொருட்கள் இல்லாமல் இந்த வழக்கை கொண்டுச் செல்வதில் சிரமம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருந்தனர்.

இலங்கை சட்டவாக்கத்துக்கு உட்பட்டு நெல்லியடி பொலிஸாரினால் தொடுக்கப்பட்ட வழக்கா? அல்லது குறித்த சந்தேகநபர்கள் மீது வீண்பழி சுமத்த தொடுக்கப்பட்ட வழக்கா? என ஆராய்ந்து ஒரு மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கு, பருத்தித்துறை நீதவான் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

Related Posts