‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் தனது சிறந்த இன்னிங்ஸ்’ என்று இந்திய அணியின் துணை கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார்.
மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் விராட்கோலி 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 18-வது மற்றும் 19-வது ஓவரில் விராட்கோலி காட்டிய அதிரடி அணியின் வெற்றியை எளிதாக்கியது.
42-வது இருபது ஓவர் போட்டியில் விளையாடிய விராட்கோலி மொத்தம் 1,552 ரன்கள் (39 இன்னிங்சில்) குவித்துள்ளார். இதில் 15 அரை சதங்களும் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9-வது போட்டியில் ஆடிய அவர் கண்ட 4-வது அரை சதம் இதுவாகும். விராட்கோலியின் அதிகபட்சமும் (ஆட்டம் இழக்காமல் 90 ரன்) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் பதிவாகி இருக்கிறது.
ஆட்டநாயகன் விருது பெற்ற விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மொகாலி ரசிகர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ரசிகர்களின் ஆதரவு கடினமான கட்டங்களை கடக்க மிகவும் உதவியாக இருந்தது. கிரிக்கெட் வீரராக மேம்பட ஒவ்வொரு ஆட்டத்திலும் சவால் தேவையானதாகும். மகிழ்ச்சியால் தத்தளிக்கும் எனக்கு இதற்கு மேல் என்ன சொல்லவென்று தெரியவில்லை.
யுவராஜ்சிங் என்னுடன் நல்ல இணை ஆட்டத்தை அளித்தார். கேப்டன் டோனி எனது ஆட்டத்தை அமைதிப்படுத்தினார். நானும், டோனியும் எப்பொழுதும் சிறப்பாக ஓடி ரன் எடுக்கக்கூடியவர்கள். இருவருக்கும் இடையிலான புரிந்துணர்தலும், கடினமான உடற்பயிற்சியும் வேகமாக ரன் எடுக்க உதவிகரமாக இருக்கிறது. இது என்னுடைய ‘டாப்-3’ இன்னிங்சில் ஒன்றாகும். தற்போது நெருக்கடியான தருணத்தில் வெளிப்பட்ட இந்த இன்னிங்ஸ் ஒருவேளை எனது சிறந்த இன்னிங்ஸ் எனலாம்.இவ்வாறு விராட்கோலி கூறினார்.
தெண்டுல்கர், லாரா வாழ்த்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த விராட்கோலிக்கு இந்திய முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு வீரர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில் சிலவற்றை இங்கு காணலாம்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்: வாவ் கோலி, சிறப்பான ஆட்டம் இது. மாபெரும் வெற்றி, மிகப்பெரிய போராட்டம்.
இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர்: டெஸ்ட் கேப்டனாக என்று உருவெடுத்தாரோ? அன்றே விராட்கோலி சகாப்தம் தொடங்கி விட்டது. அது தற்போது இன்னும் வேகம் பிடித்துள்ளது. அடுத்த சச்சினாக, விராட்கோலி உருவெடுத்துள்ளார்.
இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக்: விராட் தான் அடுத்த சச்சின் தெண்டுல்கர். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கதாநாயகன் லாரா: விராட்கோலி நம்ப முடியாத சிறந்த பேட்ஸ்மேன். இதற்கு மேல் அவரை பற்றி சொல்ல வேண்டியதில்லை.
பிளின்டாப் சர்ச்சை
இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் பிளின்டாப் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் விராட்கோலியை மறைமுகமாக மட்டம் தட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘விராட்கோலி இதேபோல் தொடர்ந்து ஆடினால் ஒருநாள் ஜோரூட்டுக்கு (இங்கிலாந்து வீரர்) நிகராக வந்து விடலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், ‘ஜோரூட்டா யாரது’ என்று கருத்து பதிவு செய்துள்ளார். அதற்கு அமிதாப்பச்சனை யார்? என்று பிளின்டாப் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் பிளின்டாப்பை வசைபாடி வருகிறார்கள்.