அனைத்து பாடசாலைகளையும் 12.00 மணியுடன் விட கோரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளை நண்பகல் 12.00 மணியுடன் மூடி விடும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்திருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கடந்த சில வாரங்களாக நாட்டில் நீடிக்கின்ற அது உஷ்ணமான கால நிலை காரணமாக பல பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் பல்வேறு வகையான நோய்களும் ஏற்படுவதனால் பகல் வேளைகளில் வெளியில் நடமாடுவதற்கு மக்கள் அஞ்சுகின்றனர்.

இந்த உஷ்ணமான கால நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலை மட்ட விளையாட்டு போட்டிகளுக்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளதுடன் அவற்றை எதிர்வரும் மே மாதம் வரை ஒத்தி வைத்துள்ளது. அதனை எமது சங்கம் வரவேற்கிறது.

ஆனால் இந்த உஷ்ணமான கால நிலை காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளில் இருந்து கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் பெரும் அவதியுறுகின்றனர். அத்துடன் நீர்த்தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் பாடசாலை நேரங்களில் குடிநீருக்காக கஷ்டப்படுகின்றனர்.

எனவே கடும் வெப்பம் காரணமாக மாணவர்கள் எதிர்நோக்கும் இந்த அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அனைத்து பாடசாலைகளையும் நண்பகல் 12.00 மணியுடன் கலைத்து விடுவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்து அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.

Related Posts