இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியான அடக்கு முறைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் சார்ந்ததும் தீர்க்கமானதுமான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.தெற்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு அரங்கேற்றுகிறது.
மறுபுறத்தில் தமிழர் பிரதேசங்களில் தமிழரது காணிகள் பறிக்கப்படுகின்றன. சிங்கள, இராணுவக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. தமிழர்களது சமூக, மாணவ தலைமைகள் தாக்கப்படுவது அச்சுறுத்தப்படுவதும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருப்பது போன்ற இன்னோரன்ன அநியாயங்கள் எமது பகுதியில் தொடர்கின்றன.
இது தொடர்பில் மக்கள் சார்ந்ததும் தீர்க்கமானதுமான முடிவு ஒன்றை எமது மக்களின் நன்மை கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய தருணம் இது. தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் தீர்வுக்கான செயல்முறை எனும் அரசின் காலம் தாழ்த்தும் மற்றும் சர்வதேசத்திடம் நேரத்தைக் கடத்தும் முயற்சியில் பங்குபற்றுவது அர்த்தமற்றதொன்று.
ஜெனிவாத் தீர்மானத்தாலும் எல்.எல்.ஆர்.சி. அறிக்கையாலும் தமிழர்களுக்கு என்ன பயன் என்பது தொடர்பில் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.யுத்தத்துக்கு தலைமை தாங்கிய சரத்பொன்சேகாவின் விடுதலைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தமிழர் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களுக்கு சர்வதேசம் முக்கியத்துவம் அளிக்காமை கவலையளிக்கிறது. யாழ். பல்கலைக்கழகம் நீண்டகாலமாக தமிழ் மக்களின் பேசும் சக்தியாக இருந்து வருகிறது. யாழ். பல்கலைக்கழகம் தமிழ்த் தேசியச் செயற்பாடுகளுக்கு அளித்துவரும் ஆதரவை குறைப்பதற்காகவே பல்வேறுபட்ட தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக பேரவைக்கான வெளியகப் பிரதிநிதிகள், துணைவேந்தர் பதவிக்கான நியமனம் என்பவற்றில் அரசியல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் மத்தியில் இராணுவ உளவாளிகளின் ஊடுருவலைச் செயற் படுத்துவதற்கான முயற்சிகள் கல்விசாரா ஊழியர் நியமனங்களில் அரசு சார்ந்தோரால் பிரேரிக்கப்படுவோர் நியமிக்கப்படுதல் போன்றவற்றை உதாரணப்படுத்த முடியும். இவ்வாறான செயற்பாடுகளால் பல்கலைக்கழக ஆசிரியர் களதும் மாணவர்களதும் சுயாதீன கல்வி சார்ந்த மற்றும் சமூகச் செயற்பாடுகளுக்கு குந்தகமாக அமைந்துள்ளது. கடந்த வருடம் தவபாலசிங்கம் தாக்கப்பட்டார், தற்போது தர்சானந் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியோர் தொடர்பான விசார ணையில் எதுவித முன்னேற்றமும் இல்லை. இராணுவக் காவலரணுக்கு அண்மையில் வைத்து இவர்கள் தாக்கப்பட்டமை தாயகத்தில் பயங்கரமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள் மீதான அடக்குமுறைகளைச் சர்வதேச நாடுகள் தட்டிக் கேட்க வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.