20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
20 ஓவர் உலக கோப்பை தொடரில், நாக்பூரில் நேற்று மாலை நடந்த சூப்பர்–10 சுற்றின் 18–வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் –ஆப்கானிஸ்தான் (குரூப்1) அணிகள் சந்தித்தன. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அறிமுக வீரராக எவின் லிவிஸ் சேர்க்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி, பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் வீரர்கள், வெஸ்ட் இண்டீசின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். 56 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (11.5 ஓவர்) தாரைவார்த்த நிலையில், 6–வது வரிசை ஆட்டக்காரர் நஜிபுல்லா ஜட்ரன், தாக்குப்பிடித்து விளையாடி தங்கள் அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினார். 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது. நஜிபுல்லா ஜட்ரன் 48 ரன்களுடன் (40 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பத்ரீ 3 விக்கெட்டுகளும், ரஸ்செல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து 124 ரன் இலக்கை நோக்கி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் லிவிஸ் 7 பந்தில் ரன் ஏதுமின்றி வெளியேற்றப்பட்டார். மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 22 ரன்களில் (15 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார்.
‘‘குறைவான இலக்கு, ஆப்கானிஸ்தான் குட்டி அணி, அதனால் வெற்றி எப்படியும் நமக்கு தான்’’ என்ற மனபோக்குடனே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆடினர். அதீத நம்பிக்கையே கடைசியில் அவர்களுக்கு ஆபத்தாக மாறியது.
ஆப்கானிஸ்தான் வீரர்கள் பந்து வீச்சிலும் சரி, பீல்டிங்கிலும் சரி ஆக்ரோஷமாக செயல்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ‘தண்ணி’ காட்டினர். சாமுவேல்ஸ் (5 ரன்), வெய்ன் பிராவோ (28 ரன்), ராம்டின் (18 ரன்), ரஸ்செல் (7 ரன்), கேப்டன் டேரன் சேமி (6 ரன்) உள்ளிட்டோரை வரிசையாக கழற்றினர். கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தன.
பரபரப்பான 20–வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி வீசினார். முதல் இரு பந்தில் ரன் கொடுக்காத முகமது நபி, 3–வது பந்தில் கார்லஸ் பிராத்வெய்ட்டை (13 ரன், 2 சிக்சர்) காலி செய்தார். அவர் வீசிய புல்டாசை பிராத்வெய்ட் தூக்கியடித்த போது, அதை நஜிபுல்லா ஜட்ரன் சூப்பராக கேட்ச் செய்தார். இதன் பிறகு தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறிய ஆந்த்ரே பிளட்சர் மறுபடியும் ஆட வந்தார். அவரது வருகையும் வெஸ்ட் இண்டீசுக்கு எந்த பலனையும் தரவில்லை. கடைசி 3 பந்தில் வெஸ்ட் இண்டீஸ் 3 ரன்களே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 117 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் முகமது நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வெற்றி பெற்றதும் ‘சாம்பியன்ஸ்…சாம்பியன்ஸ்’ என்ற பாடலுடன் அதற்குரிய பிரத்யேக நடனத்தை களத்தில் ஆடி கொண்டாடுவார்கள். ஆப்கானிஸ்தான் வீரர்கள் அந்த நடனத்தை ஆடி கிண்டல் செய்தனர்.
ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. டெஸ்டில் டாப்–8–ல் உள்ள ஒரு அணியை ஆப்கானிஸ்தான் சாய்ப்பது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது முதல் அடியாகும். ஆனாலும் புள்ளி பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறது. 101 ரன்னுக்குள் வெஸ்ட் இண்டீஸ் முடக்கப்பட்டிருந்தால், புள்ளி பட்டியலில் 2–வது இடத்துக்கு சென்றிருக்கும்.