அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது

அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என உறுதியளிக்கும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் “தயார் நிலை ஏற்பாடாக” (Standby Arrangement) கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அரசு அறிவித்தது.

இது தொடர்பாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில்

பொது எதிர்கட்சி எனக்கூறிக்கொள்வோர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து மக்களை, பிழையாக வழிநடத்துக்கின்றனர்.

அரச வங்கிகள் ஒரு போதும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது அதனை பாதுகாப்பதற்கான அனைத்தையும் அரசு முன்னெடுக்கும்.

இவ்வாறான எந்தவொரு நிபந்தனையையும் சர்வதேச நாணய நிதியம் விதிக்கவில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டது. கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அப்போது சர்வதேச நாணய நிதியக் கடன் இனித்தது இன்று எமது அரசு பேச்சு நடத்துவது கசக்கின்றது.

உலகப் பொருளாதாரத்தில் இன்று நெருக்கடி தோன்றியுள்ளது.

மத்திய கிழக்கில் ஸ்திரமில்லா நிலை தோன்றினால் அதேபோன்று பொருளாதார நெடிக்கடிகள் தலைதூக்கினால் அந்தச் சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும்.

எனவே தான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்துகின்றோம்.

அதேபோன்று மஹிந்த ராஜபக் ஷ வாங்கிய கடன் தொகை எவ்வளவு என்பதை இன்றுவரை நிச்சயித்துக்கொள்ள முடியாதுள்ளது. வாரத்திற்கு வாரம் மஹிந்த வாங்கிய கடன்கள் “பூதத்தை” போன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை எவ்வாறு சமாளிப்பது எவ்வாறு வெற்றி கொள்வது.

நாட்டின் பொருளாதாரத்தின் எப்படிக் கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்கின்றோம். அதற்காகவே பேச்சுக்களை நடாத்துகின்றோம். அத்தோடு சர்வதேச ரீதியில் ஏற்படவுள்ள பொருளாதார நெருக்கடிகளை வெற்றிக்கொள்ள நாம் தயாராக வேண்டும். கடந்த காலங்களில் மகிந்த ராஜபக் ஷ செய்த பாவங்களை நாம் கழுவவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வரையறை இல்லாமல் கடன்கள் வாங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்களுக்கு கண்காட்சிகளே காண்பிக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் உற்பத்திகள் அதிகரிக்கப்படவில்லை. தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு கடந்த ஆட்சியாளர்கள் வரையறை இல்லாமல் கடன்களை வாங்கி உள்ளனர். ஆனால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகள் ஏற்படவில்லை. மகிந்த செய்த பாவத்தை நாம் கழுவிக் கொண்டிருக்கின்றோம். அவர் தான் நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர். இன்று நாம் இதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எனவே மக்கள் மீது சுமைகளை அதிகரிக்காது அரச தனியார் ஊழியர்களுக்கான சம்பளங்களில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படாதவிதத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து “தயார் நிலை ஏற்பாடாக” கடன் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இதற்காக அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அரச நிறுவனங்களையோ அரச வங்கிகளையோ தனியார் மயமாக்க தீர்மானம் எடுக்கவில்லை.

இவ்வாறான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை. கடன்களை வாங்கி நாட்டை நெருக்கடியில் தள்ளியவர்களே தமது குறைகளை மறைத்துக் கொள்ள பொய்களை கூறுகின்றனர்.

கடந்த பத்து வருடங்களாக நாட்டை சீரழித்தவர்கள் இன்று புதிதாக பிறந்தவர்கள் போன்று பேசுகின்றனர்.

இந்தியர்கள் இங்கு வந்து தொழில் செய்ய முடியாது எட்கா உடன்படிக்கையில் அவ்வாறான விடயங்கள் எதுவும் இல்லை.

எனவே எம்மக்களின் தொழில்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. அத்தோடு உடன்படிக்கை தொடர்பாக பேச்சுக்கள் இடம்பெற்று வருவது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

Related Posts