வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வடக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்குள்ள படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதான இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2010 ஆம் ஆண்டுக்குள் மீள் குடியேற்றத்தை எப்படி முடிப்பது என்பது பற்றியும் எந்தெந்த இடங்களில் படைமுகாம்களை அகற்றுவது என்பது பற்றியும் தமிழ்மக்களை எதுவித தொல்லைகளுமின்றி எப்படிக் குடியேற்றுவது என்பது தொடர்பிலும் திட்டங்களை வகுத்திருந்தேன். அந்தத் திட்டங்களை அவர்கள் அப்போது வெறுத்தனர். ஆனால் இன்றுவரை இவர்களால் ஒன்று கூடச் செய்யமுடியாமல் போயுள்ளது.
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டியது கட்டாயமாகும். இராணுவ முகாம்களால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுமாயின் உண்மையில் அது பிரச்சினைதான். அதே போல், கிட்டத்தட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வளித்திருக்கிறோம்.
அவர்களுக்குச் சரியான புனர்வாழ்வளிக்கப்பட்டதா? அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்களா என்பதையும் பார்க்கவேண்டி இருக்கிறது. மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுத்த பின்னர் இராணுவ முகாம்களைப் படிப்படியாக அகற்றலாம்.
வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தினர் தலையிடக் கூடாது. அது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இராணுவம் இராணுவத்தின் வேலையை மட்டும்தான் செய்யவேண்டும்.
கடந்த மூன்று வருடங்களில் இராணுவத்தை இவர்கள் சிவில் நிர்வாகத்திலிருந்து விலக்கியிருக்கலாம். இப்போது இவர்களால் போடப்பட்டிருக்கும் அதிகாரிகள் கூட தகுதிவாய்ந்தவர்கள் அல்லர். அரசியல் அடிவருடிகளைத்தான் இவர்கள் நியமித்துள்ளனர். யாழ்ப்பாணத்தைப் பாருங்கள். இதுதான் நிலைமை. கொள்கை இல்லாமல் போனால் இப்படித்தான் இருக்கும் என சரத் பொன்சேக்கா கூறியுள்ளார்.