கேரளா கஞ்சா 8 கிலோ பொதியை விற்பனைக்கு கொண்டு வந்தவர் பொலிஸாரை கண்டதும் கஞ்சா பொதியை தூக்கி வீசிவிட்டு தப்பியோடியுள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். கோப்பாய் இராச வீதி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த நபரை கைதுசெய்வதற்காக பொலிஸார் கோப்பாய் மத்தி கோப்பாய் பகுதிக்கு சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் வீதியில் பொலிஸார் நிற்பதைக் கண்டதும், தான் கொண்டு வந்த 8 கிலோ கஞ்சா பொதியினை வீதியில் வீசிவிட்டு தப்பி ஓடிச்சென்றுள்ளார்.
பொலிஸார் மோட்டார் சைக்கிள் இலக்கத்தினை பதிவு செய்து கொண்டு, குறித்த நபர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை சிலாபத்துறை கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் 51 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து மீன்பிடி படகுகளில் இவை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் கடற்படை கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகளை சிலாபத்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.