Ad Widget

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஷேன் வாட்சன்

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ஷேன் வாட்சன் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்–ரவுண்டரான ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரன ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். செப்டம்பர் மாதத்துடன் ஒருநாள் போட்டியில் இருந்தும் அவர் விலகினார்.

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் ஷேன் வாட்சன், மொகாலியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இருக்கும் சூழ்நிலையில் தனது ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார். இந்த உலக கோப்பை போட்டி தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷேன் வாட்சன் மொகாலியில் நேற்று அறிவித்தார்.

2002–ம் ஆண்டு மார்ச் 24–ந் தேதி செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷேன் வாட்சன் தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுக்கும் முடிவை அறிமுகமான அதே தினத்தில் (மார்ச் 24) வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து 34 வயதான ஷேன் வாட்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தர்மசாலாவில் ஒருநாள் காலையில் எழுந்து கண்விழித்த போது அருமையான காட்சியை பார்த்தேன். அது என்ன என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. அப்போது இது தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம் என்று முடிவு எடுத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிரடியாக விளையாடி ரன் குவிப்பதில் வல்லவரான ஷேன் வாட்சன் தனது அபாரமான பேட்டிங்கால் அணிக்கு பலமுறை வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். 3 ஒருநாள் உலக கோப்பை போட்டியில் விளையாடி இருக்கும் அவர் 2007 மற்றும் 2015–ம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்துள்ளார். அத்துடன் இதுவரை நடந்த அனைத்து 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஷேன் வாட்சன் 59 டெஸ்ட் போட்டியில் விளையாடி 4 சதம் உள்பட 3,731 ரன்கள் சேர்த்து இருப்பதுடன் 75 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். 190 ஒருநாள் போட்டியில் ஆடி 9 சதத்துடன் 5,757 ரன்களும், 168 விக்கெட்டுகளும், 56 இருபது ஓவர் போட்டியில் ஆடி ஒரு சதத்துடன் 1,400 ரன்களும், 46 விக்கெட்டுகளும் எடுத்து இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஷேன் வாட்சன் முதல் தர போட்டியில் தொடருவார். அவரை ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த ஆண்டு ரூ.9½ கோடிக்கு ஏலம் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts