லேக் நிறுவனத்தை ஸ்தாபித்து இலங்கையில் ஊடகத்துறைக்கு அடித்தளமிட்ட எஸ்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நாலனி விக்கிரமசிங்க ஆகியோருக்கு மகனாக 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிறந்தார்.
ரோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்த அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்திருந்தார். பின்னர் சட்டக் கல்லூரி மூலம் சட்டத்தரணியாக வெளியான ரணில் விக்கிரமசிங்க, 1975ம் ஆண்டு பியகம தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
1977ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக இந்நாட்டின் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமே உரியதாகும். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்,பிரதமர் என்று அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்து பழுத்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் 4 தடவைகள் பிரதமராக பதவி வகித்த பெருமையும் அவருக்கு உரியதாகும். இலங்கையின் மிகச் சிறந்த அரசியல் தலைவராக, பழுத்த ராஜதந்திரியாக, உலகின் கீர்த்திமிகு ஜனநாயக அரசியல்வாதிகளில் ஒருவராகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தின் மத்தியில் கீர்த்தியைப் பெற்றுள்ளார்.